Close
நவம்பர் 21, 2024 11:39 காலை

பாடும் நிலா பாலு (எஸ்பிபி).. நினைவலைகள்.. இங்கிலாந்திலிருந்து சங்கர்…

இங்கிலாந்திலிருந்து சங்கர்

பாடும் நிலா பாலு நினைவலைகள்

பல சமயங்களில் எனது காரில் அமர்ந்தவுடன், கைகள் அனிச்சையாக பதிந்து வைத்த பாடல்களைஒலிக்க செய்து விடுகிறது. பலமணி நேர வாகன நெரிசலில் சிக்கினாலும் பாலுவின் தயவில் எரிச்சலடையாமல் வண்டியோட்ட முடிகிறது.

தேநீர் கடைக்காரர், முடி திருத்துபவர், மூட்டை தூக்குபவர்கள், பேரூந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் இப்படி பல சாமான்யர்கள் பாலா பாடிய பாடல் வரிகளை நாக்கு நுனியில் வைத்திருக்கிறார்கள். பாடலுக்குரிய பின்னணி இசையை கூட சில ஓட்டுநர்கள் வாயிலேயே வாசித்து விடுவார்கள். பயணிக்கும் போது பார்த்திருக்கிறேன். நீங்களும் நானும் கூட இதை நம்மையறியாமல் வாகனம் ஓட்டும் போது செய்திருப்போம் தன்னிச்சையாக..

நான், நீங்கள் உட்பட இவர்களுக்கும் அடானா ராகத்திற்கும் சஹானா ராகத்துக்கும் வித்தியாசம் தெரியாது தான். ஆனால் மனதார ரசிக்க தெரியும். காரணம் பாலு..

 சில கந்தர்வர்கள் இந்த பூவுலகில் அவதரித்து, தாங்கள் கற்ற மொத்த வித்தையையும் இறக்கி விட்டு மீண்டும் தேவலோகம் சென்று விடுவார்கள். பாலுவும் ஒரு கந்தர்வர். எளிய மக்களின் துயரை, வலியை, பிணியை, மறக்கடிக்க செய்த ஒரு கந்தர்வர்.

நாமெல்லாம் ரசிக்கும்படியாக பல பாடல்களுக்கு  மெட்டுப் போட்ட பல இசையமைப்பாளர்களுக்கு, அவர்கள் ஆத்மார்த்தமாக ரசிக்கும் பாடல் அல்லது அவர்கள் படைப்பில் ஆக சிறந்த பாடல் என்கிற ஒரு பட்டியல்  இருக்கும். அவற்றில் கட்டாயம் பாலு அவர்கள் பாடிய பாடல் இருக்கும்.

பாடுவதற்கென்றே பிறந்தவர் பாலு. சலிக்காமல் பாடினார், அவரது வாழ்க்கையையும் பாடலையும் பிரித்து பார்க்க முடியாது. வாழும்போதே நிறைவான வாழ்வை வாழ்ந்து விட்டார். நம்மை விட்டு பிரிந்தாலும் பாடல்களாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் பாலு. கலைஞர்கள் தொடுவது நம் இன்னுணர்வின் ஒரு பகுதியை மட்டுமே; இருந்தாலும் ஏதோ ஒரு விதத்தில் மக்களுக்கு ஆத்ம திருப்தியைக் கொடுத்து, எதிர்கொள்ளும் துன்பங்களை மறக்க வைக்கிறார்கள்.

1966ஆம் ஆண்டு ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடி திரைத்துறையில் அறிமுகமாகியுள்ள இவர், தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் இதுவரை பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.

வெள்ளித்திரையில் பாடகர், இசையமைப்பாளர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முகம் கொண்டு பணியாற்றி வந்துள்ள இவர், பல திரைப்பட நடிகர்களுக்கு பின்னணி குரல் அளித்துள்ளார். இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும், 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் வழங்கியுள்ளது.

எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே.., இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்.., உண்மை தான்.

#இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top