Close
நவம்பர் 22, 2024 9:46 காலை

திருச்சி அரசு கல்லூரியில் பெடரல் வங்கி சார்பில் ரத்த தான முகாம்

‘வாழும் வரை ரத்த தானம். வாழ்ந்து முடிந்த பின்னர் உடல் தானம்’ என்ற வார்த்தைகள் இன்று மருத்துவ உலகில் விழிப்புணர்வு வாசகங்களாக பேசப்பட்டு வருகிறது. சாலை விபத்துக்களில் கொடுங்காயம் அடைந்து அபாய கட்டத்தில் உள்ளவர்கள், அறுவை சிகிச்சையின்போது ஏற்படும் ரத்த இழப்பை ஈடுகட்டுவதற்கும் ரத்தம் தேவைப்படுகிறது. தேவைப்படும் நேரத்தில் ரத்தத்தின் வகைப்பாட்டினை தெரிந்து கொண்டு தேடுவதை விட அவற்றை சேகரித்து ரத்த வங்கிகளில் சேமித்து வைத்தால் எத்தனையோ மனித உயிர்களை காப்பாற்ற முடியும்.

அதனால் தான் ரத்த தானம் தானங்களில் எல்லாம் சிறந்த தானமாக கருதப்படுகிறது. ஆரோக்கியமான மனித உடலில் சுமார் 5 லிட்டர் அளவிற்கு ரத்தம்  இருக்கிறது.  இதில் குறிப்பி்டட அளவு ரத்தத்தை நாம் தானம் செய்தாலும் மீண்டும் அதே அளவிற்கு ஊறி விடும் தன்மை ரத்தத்திற்கு உண்டு. ரத்த தானத்தின் முக்கியத்துவம் கருதி அதனை வருடத்திற்கு ஒரு முறை, மாதத்திற்கு ஒரு முறை என ரத்தக்கொடை செய்பவர்கள் இருப்பதால் தான் பல மருத்துவமனைகளில் ரத்த வங்கிகளின் செயல்பாடு திருப்தி கரமாக இயங்கி வருகிறது.

ரத்த தானம் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல்வேறு நிறுவனங்கள், சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் அவ்வப்போது ரத்த தான முகாம்களை நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் பெடரல் வங்கியின் நிறுவன தினத்தையொட்டி அவ்வங்கியின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ்  திருச்சி தந்தை பெரியார் அரசு கல்லூரியில் இன்று ரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்த ரத்ததான முகாமினை தந்தை பெரியார் கல்லூரியின்  யூத் ரெட் கிராஸ் மற்றும்  தேசிய மாணவர் படை அமைப்பு ஆகியவை ஒருங்கிணைந்து நடத்தினர்.  இந்த ரத்ததான முகாமிற்கு தந்தை  பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கே.வாசுதேவன் தலைமை தாங்கினார்.தமிழ் துறை இணை பேராசிரியர்  குணசேகரன் வரவேற்று பேசினார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறை பேராசிரியரும், இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளருமான  எஸ். கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார்.

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் திருச்சி கிளை தலைவரும்,  இந்திரா கணேசன் கல்வி குழுமத்தின் செயலாளருமான ஜி. ராஜசேகரன், பெடரல் வங்கியின் திருச்சி மண்டல மேலாளர் ஜி.ராஜா ஸ்ரீனிவாசன் ஆகியோர் நிகழ்விற்கு முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமில் கல்லூரி மாணவ மாணவிகள், மற்றும் வங்கி ஊழியர்கள் உள்பட  68 பேர் ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் செய்தவர்களுக்கு அதற்கான சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியாக தந்தை பெரியார் அரசு கல்லூரியின் தேசிய மாணவர் படை அதிகாரி கேப்டன் பி. ஆரோக்கிய சகாயராஜ் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top