Close
நவம்பர் 23, 2024 8:01 காலை

கஞ்சா குறித்து சாமியார்களிடம் அதிரடி சோதனை; ஓட்டம் பிடித்த போலி சாமியார்கள்!

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சாமியார்களிடம் கஞ்சா உள்ளதா? என காவல்துறையினர் அதிரடி சோதனை ஞாயிற்றுக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனர். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் உள்ளதா என்று விசாரணை மேற்கொண்டனர். கஞ்சா போதையில் சாமியார்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தை தொடர்ந்து போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த அதிரடி சோதனையின் போது போலி சாமியார்கள் தலைதெறிக்க தப்பி ஓடினர்.
கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.
ஆயிரக்கணக்கான பக்தர்களும், பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை புரிந்து அண்ணாமலையாரை வழிபடுவது வழக்கம். இக்கோயிலுக்கு உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி நாட்களில் வருகை புரிந்து அண்ணாமலையாரை வழிபட்டு, 14 கிலோ மீட்டர் கிரிவலம் வருவது வழக்கம். கடந்த சில மாதங்களாக தினமும் ஆயிரக்கணக்கான பகல் இரவு என்று எந்நேரமும் பக்தர்கள் கிரிவலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
கிரிவலப்பாதையில் 500-க்கும் மேற்பட்ட சாமியார்கள் அங்கேயே யாசகம் பெற்று வசித்து வருகிறார்கள்.கிரிவலப் பாதையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பல குற்ற செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக இங்கு வந்து சாமியார் என்று வேடம் அணிந்து போலியாக உள்ள சாமியார்களின் வருகை தற்போது அதிகரித்து வருவதாகவும், இந்த போலி சாமியார்கள் கிரிவலப் பாதையிலேயே படுத்து உறங்குவதும் எப்போதும் கஞ்சா போதையில் இருப்பதும், இரவு நேரத்தில் கிரிவலம் வரும் பக்தர்களிடம் பணம் பறிப்பதுமாக உள்ளனர் எனவே இவர்கள் மீது மாவட்ட காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். போலீசாரும் அவ்வப்போது தொடர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
கிரிவலப்பாதையில் சாமியார்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது உண்டு. அந்தவகையில், கஞ்சா போதையில் அங்குள்ள கடைக்காரர்களை மிரட்டுவது, மக்களிடம் தகராறு செய்வது உள்ளிட்டவற்றில் ஈடுபடுவதாக சில சாமியார்கள் மீது புகார் எழுந்தது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக கஞ்சா போதையில் சாமியார்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும் இதில் கஞ்சா குடிக்க மறுத்த ஒரு சாமியாரை கத்தியால் தாக்கியதில் காயம் அடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவைத் தொடா்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை நகர் மற்றும் கிரிவலப்பாதையில் தங்கியுள்ள சாமியார்களிடம் காவல்துறையினர் அதிரடியாக விசாரணை நடத்தினர்.
எங்கு இருந்து வருகிறீர்கள். எவ்வளவு நாட்களாக தங்கியுள்ளீர்கள். கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட பழக்கம் இருக்கிறதா. உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியதோடு, கிரிவலப்பாதையில் தங்கியுள்ள சாமியார்களிடம் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் உள்ளதா? என சோதனை மெற்கோண்டனர். அவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைக்கிறது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசார் வருவதை பார்த்ததும் ஒரு சில போலி சாமியார்கள் ஓட்டம் பிடித்தனர்.
மேலும், திருவண்ணாமலை நகரில் மத்திய பேருந்து நிலையம், ரயில் நிலையம் என பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் இந்தச் சோதனை நடைபெற்றது. தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வியாபாரிகள் விற்பனை செய்கிறாா்களா எனவும் காவல்துறையினர் சோதனை செய்தனா். மதுப்புட்டிகள் பதுக்கி வைத்து கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தனா்.
இதைத் தொடா்ந்து, கடை உரிமையாளா்களிடம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது, மீறி விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனா்.
இந்த அதிரடி சோதனையால் கிரிவலம் வரும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுபோல அதிரடி சோதனைகள் அடிக்கடி நடத்தினால் கிரிவலப் பாதையில் உள்ள போலி சாமியார்கள் இந்த பக்கமே வரமாட்டார்கள் என காவல்துறைக்கு பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பில் , கிரிவலப் பாதையில் யாராவது சாமியார்கள் தகராறு ஈடுபட்டால் உடனடியாக திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு அல்லது கிராமிய காவல் நிலையத்திற்கு அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கோ அல்லது 100 ஐ டயல் செய்யலாம். என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top