காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் திருநங்கைகள்/திருநம்பிகளுக்கான வாழ்வாதார முன்னேற்றத்திற்கான ஆய்வு கூட்டத்தில் திருநங்கையர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வழங்கினார்கள்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பாக திருநங்கைகள்/திருநம்பிகள் வாழ்வாதாரத்தில் முன்னேறுவதற்காக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் காலாண்டு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தஆய்வுக் கூட்டத்தில் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் 40க்கும் மேற்பட்ட திருநங்கை/திருநம்பிகள் கலந்துக் கொண்டனர்.
ஆய்வுக் கூட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை, மின்னணு குடும்ப அட்டை, இலவச வீட்டு மணை பட்டா, மாநில அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை, திருநங்கைகளுக்கான ஓய்வூதியம், திருநங்கை/திருநம்பிகளுக்கான உயர்கல்வி உதவித்தொகை மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன.
தொடர்ந்து 10 திருநங்கைகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்கள்.
ஆய்வுக் கூட்டத்தில் திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணக்கண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி, மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா, அரசு அலுவலர்கள் மற்றும் திருநங்கைகள்/திருநம்பிகள் கலந்து கொண்டனர்.