விற்பனைக்காக போதைப்பொருள் பாக்கெட்டுகள் வைத்திருந்ததாக மாமானாரும் உறவின் முறை மருமகனும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.3லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பாக்கெட்டுக்களையும் போலீஸôர் புதன்கிழமை பறிமுதல் செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே கண்டிகை கிராமத்தில் கட்டிடப்பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருபவர் சுனில் என்ற கைலாஷ் (19).
இவர் தனது கடையில் போதைப்பொருள் பாக்கெட்டுகள் விற்பனை செய்வதற்காக வைத்திருப்பதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்திக்கு தகவல் கிடைத்தது.
இத்தகவலின் பேரில் அங்கு சென்று சோதனையிட்ட போது அவரிடம் மொத்தம் 69 கிலோ போதைப்பொருள் பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து சுனிலை கைது செய்து அவரிடமிருந்த 69 கிலோ போதைப் பொருள் பாக்கெட்டுகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.பின்னர் சுனிலை ஒரகடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மற்றொரு தகவலின் பேரில் சுனிலின் மாமா உறவின்முறைக்காரரான தினேஷ்(35)க்கு சொந்தமான வாலாஜாபாத்தில் உள்ள கட்டிடப் பொருள் விற்பனைக் கடையையும் சோதனையிட்டனர்.
அவரிடமிருந்து 240 போதைப்பொருள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், தினேஷையும் கைது செய்து வாலாஜாபாத் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மாமா தினேஷ் மற்றும் அவரது தங்கை மகனும் மருமகனுமான சுனில் ஆகிய இருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு ரூ.3 லட்சம் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.