காஞ்சி குமரக்கோட்ட கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார நாளன்று வேண்டுதலை நிறைவேற்றஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் அரோகரா கோஷம் விண்ணைத் தொடுகிறது.
ஆறுபடை வீடுகளில் மட்டுமல்லாது சிறு கிராமத்தில் உள்ள முருகன் ஆலயங்களிலும் முருகன் சன்னதி உள்ள சிவாலயங்களும் கந்த சஷ்டி பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.
கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை முருக பக்தர்கள் கொண்டாடும் விரத விழாவாகும்.
சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுகிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி விரத காலமாகும் . இந்த ஆண்டு கந்த சஷ்டி விரதம் 2ம் தேதி தொடங்கி வரும் 8 ம் தேதி நிறைவு பெறும் .
அவ்வகையில் கோயில் நகரமென கூறப்படும் காஞ்சியில் அமைந்துள்ள காஞ்சி குமரக்கோட்ட சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 2ம் தேதி காலை 6 மணி முதல் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கோயில் வலம் வந்து இறையருள் பெற்று செல்கின்றனர்
இன்று சூரசம்ஹார நாள் என்பதால் அதிகாலை சிறப்பு அபிஷேக அலங்காரத்தில் சுப்பிரமணியசாமி எழுந்தருள ஏராளமான பக்தர்கள் காலையில் தரிசனம் மேற்கொண்டு இறையருள் பெற்றனர்.
மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கோயில் வளாகத்தை 108 முறை வலம் வந்து தங்களது நேர்த்திக்கடனையும் செலுத்தி வருகின்றனர்.
இது மட்டுமில்ல அது உற்சவருக்கு நாள் ஒன்றுக்கு நான்கு காலம் லட்சார்ச்சனை துவங்கியுள்ளது. இதில் பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்களது பெயரை கூறி சிறப்பு சங்கல்பம் செய்து ஆரோக்கியம் மற்றும் ஐஸ்வர்யம் வேண்டி வழிபட்டு வருகின்றனர்.
கந்த சஷ்டி விழாவினையொட்டி பக்தர்களுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் திருக்கோயில் செயல் அலுவலர் கதிரவன் மற்றும் ஊழியர்களால் செய்யப்பட்டுள்ளது.