Close
நவம்பர் 15, 2024 1:54 காலை

கோட்டாட்சியரை கண்டித்து மாணவ,மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்..!

மாணவ,மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வருவாய் கோட்டாட்சியரை கண்டித்து, பரவை சத்தியமூர்த்தி நகரில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், பெற்றோர் உட்பட உள்ளிருப்பு போராட்டம் செய்து வருகின்றனர்.

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சி சத்தியமூர்த்தி நகர் பகுதியில் எஸ்டி பழங்குடியினர் காட்டுநாயக்கர் என சாதிச் சான்றிதழ் வழங்க கோரி வகுப்புகளை புறக்கணித்து 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 500 பேர் தங்களின் பெற்றோர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சிக்கு பகுதிக்கு உட்பட்ட சத்தியமூர்த்தி நகர் பகுதியில் காட்டுநாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த 700 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பரவை சமயநல்லூர் சத்தியமூர்த்தி நகர் ஆகிய அரசு பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், இவர்களுக்கு எஸ்டி காட்டுநாயக்கர் பழங்குடியினர் என்ற பெயரில் கடந்த ஆண்டு வரை சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டாக எஸ்சி காட்டுநாயக்கர் பழங்குடியினர் என்ற பெயரில் சாதி சான்றிதழ் வழங்க முடியாது என, மதுரை மாவட்ட கோட்டாட்சியர் தெரிவித்திருந்த நிலையில்,

இது குறித்து, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனு அளித்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுடன் அவர்கள் பெற்றோர் உட்பட 500 பேர் சேர்ந்து பரவை மூன்று மற்றும் நாலாவது வார்டு பகுதியில் உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் உள்ள வன காளியம்மன் உச்சி மாகாளியம்மன் கோயில் மந்தை திடலில் இன்று காலை 9 மணி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து, தகவல் அறிந்து சமயநல்லூர் போலீசார் மற்றும் மதுரை வடக்கு தாசில்தார் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போலீசார் கூறுகையில், போராட்டத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது என, கூறிய நிலையில் சாதி சான்றிதழ் வழங்கும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என காவல்துறையுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருவதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, போராட்டக்காரர்களிடம் மதுரை வடக்கு துணை தாசில்தார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top