Close
நவம்பர் 14, 2024 4:26 மணி

இனி என்ன செய்யப் போகிறார் கமலா ஹாரிஸ்?

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அடுத்து அவர் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அமெரிக்க அதிபராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் பதவியேற்க உள்ளார். கடும் போட்டி நிலவும் என்று கருத்துக்கணிப்புகள் கூறிய நிலையில், துணை அதிபர் கமலா ஹாரிஸ் இந்தத் தேர்தலில் தோல்வியடைந்தார்.

அமெரிக்காவில் அதிகார மாற்றம் நடக்கும் வரை அவர் துணை அதிபராக இருக்க முடியும். இதன் பிறகு அவர் சாமானிய மனிதனாக அடுத்தகட்டமாக என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அவர் முன் பல வாய்ப்புகள் உள்ள போதிலும், இதற்கு முன் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் சந்திக்கும் பிரச்னைகளையே கமலா ஹாரிஸும் சந்தித்து வருவதாக ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

கமலா ஹாரிஸ், தேர்தல் நடந்த நாள் அன்று ஜனநாயக கட்சியின் தலைவராகவும், எதிர்காலமாகவும் பார்க்கப்பட்டார். ஆனால், தோல்விக்கு பிறகு, ஜோ பைடன் சகாப்தத்தில் இருந்து விரைவாக செல்ல வேண்டும் என அக்கட்சி தலைவர்கள் தங்களுக்குள்ளேயே பேசி வருகின்றனர்.

துணை அதிபர் பதவியில் இருந்து கமலா ஹாரிஸ் விலகிய பிறகு அவர் முன் உள்ள வாய்ப்புகள் என்னென்ன?

ஜனநாயக கட்சியைப் பொறுத்தவரை, அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தவர்களை மீண்டும் களமிறக்குவதில் ஆர்வம் காட்டுவது கிடையாது. 2016 தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் தோல்விடைந்த பிறகு அவர் மிகவும் பலவீனமான வேட்பாளராகவே பார்க்கப்பட்டார். அதேநேரத்தில் நன்கொடையாளர்களுடன் நல்ல உறவை கொண்டு இருந்தார். இதனால், டம்பா என்ற இடத்தில் கமலா ஹாரிசுக்கு ஆதரவாக நடந்த பிரசார கூட்டத்தில் ஹிலாரி கிளிண்டன் பங்கேற்றார்.

ஜான் கெர்ரியும் தேர்தலில் 2004 தேர்தலில் ஜார்ஜ் புஷ்ஷை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பிறகு ஒபாமா ஆட்சியில் வெளியுறவு அமைச்சராக செயல்பட்டார்.

அதேபோல் துணை அதிபராக இருந்த அல்கோர் என்பவரும் 2000 ம் ஆண்டுநடந்த அதிபர் தேர்தலில் தோல்வியை சந்தித்தார். பிறகு 2004ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட முயற்சி செய்து பிறகு அதில் இருந்து பின்வாங்கினார். இவர்கள் அனைவரும் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனை வைத்து பார்க்கும் போது, கமலா ஹாரிசை 2028 அதிபர் தேர்தலில் களமிறக்க ஜனநாயக கட்சியினர் விரும்புவார்கள் என எதிர்பார்க்க முடியாது.

2024 தேர்தலிலும், ஜோ பைடன் பாதியில் இருந்து விலகியதால் தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. நன்கொடையாளர்கள் மத்தியில் கமலா ஹாரிசுக்கு நல்ல செல்வாக்கு உள்ளது.  பிரசாரத்தின்போது அவர் குற்றம்சாட்டியபடி, டிரம்ப்பின் ஆட்சி காலம் மிகவும் குழப்பம் நிறைந்ததாகவும், நாட்டிற்கு அச்சுறுத்தல் உள்ளதாக இருந்தால் மட்டுமே, கமலா ஹாரிஸின் செல்வாக்கு இன்னும் அதிகரிக்கும்.

செனட் சபைக்கு மீண்டும் போட்டியிடுவது என்பது மற்றொரு வாய்ப்பு. ஆனால், இது எளிதான காரியம் அல்ல. அதற்கான வாய்ப்பும் குறைவு.

அதேபோல், 2026 ல் கலிபோர்னியா மாகாண கவர்னர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பதவியை பிடிக்க ஜனநாயக கட்சியினர் தீவிரமாக முயன்று வருவதால், அவர்களுக்கு எதிராக கமலா ஹாரிஸ் செயல்படுவது அரிது.

அவர் சார்ந்த ஜனநாயக கட்சியில் செய்தித் தொடர்பாளர் பதவியை அவர் வகிக்கலாம். இதன் மூலம் பரந்த அங்கீகாரம் மற்றும் தொடர்புகள் உருவாகும். ஆனால், சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து அவருக்கு நிதியுதவி கிடைப்பதில் சிக்கல்கள் உருவாகலாம் என சிலர் கூறுகின்றனர்.

ஒரு வேலை, கமலா ஹாரிஸ் சட்டப்பணிக்கு திரும்பினால் அவரை ஆதரிக்க வாஷிங்டன் மற்றும் கலிபோர்னியாவில் உள்ள ஏராளமான பணக்காரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் தயாராக உள்ளனர். ஆனால், 2028 அதிபர் தேர்தலில் களமிறங்கும் எண்ணம் அவருக்கு இருந்தால், இந்த வாய்ப்பை கமலா ஹாரிஸ் பரிசீலனை செய்யவே மாட்டார்.

அதிபராக பணியாற்ற எண்ணம் கொண்டு இருந்தால், தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் இணைந்து பணியாற்றுவது என்பது சிறிய நடவடிக்கையாகவே இருக்கும். ஆனால் தேர்தல் தோல்வியால், ஜனநாயக கட்சியின் நன்கொடையாளர்கள் கோபமாக உள்ளனர். இதனால், வரும் காலத்தில் அவர்களிடம் இருந்து நிதி திரட்ட வேண்டிய கடினமான முயற்சியாக, அவர் சொந்தமாக ஒரு அமைப்பை உருவாக்கலாம்.

தன்னார்வ தொண்டு நிறுவனமா அல்லது வழக்கறிஞர் பணியா என்பதை தேர்வு செய்வதற்கு, தான் என்ன செய்ய வேண்டும் என்பதை கமலா ஹாரிஸ் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

பைடன் ஆட்சியில் கிடைத்த அனுபவம், டிரம்ப்புக்கு எதிரான பிரசாரம் ஆகியவற்றின் மூலம் கிடைத்த அனுபவத்தை பற்றி அவர் புத்தகமாக எழுதினால், அதனை வெளியிட ஏராளமான பதிப்பாளர்கள் தயாராக உள்ளனர்.

2016ல் டிரம்ப்பிற்கு எதிராக தோல்வியடைந்த ஹிலாரி கிளிண்டனும் புத்தகம் எழுதினார். ஆவணப்படம் ஒன்றையும் தயாரித்தார். அதற்கு அந்நாட்டு மக்கள் இடையே நல்ல வரவேற்பு இருந்தது. இதன்மூலம் அதிபர் பதவி மீதான ஆர்வத்திற்கு மறைமுகமாக உதவி கிடைக்கும். பைடனுடன் பணியாற்றியது, ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என விமர்சித்த நபரிடம் தோல்வியடைந்தது பற்றி அவர் என்ன நினைத்தார் என்பதை தெரிந்து கொள்ள மக்கள் தயாராகவே உள்ளனர்.

இன்னும் சில நாட்களில் அவர் துணை அதிபர் பதவியில் இருந்து விலகுவார். அதற்கு பிறகு அரசியலுக்கு அப்பாற்பட்டு நினைத்ததை செய்யலாம். இதற்காக அவர் ஹிலாரி கிளிண்டனை பின்பற்றலாம். ஹிலாரி தற்போது, தீவிர அரசியலில் இல்லை. தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல், கமலா ஹாரிஸ் தனது சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்துவதுடன், நன்கொடையாளர்களுடன் நல்ல உறவை பேணலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top