Close
நவம்பர் 21, 2024 8:01 மணி

தீபத் திருவிழாவை முன்னிட்டு ஏடிஜிபி ஆய்வு

கோயிலில் ஆய்வு மேற்கொண்ட ஏடிஜிபி தலைமையிலாயின போலீசார்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் ஏடிஜிபி ஆய்வு மேற்கொண்டார்

கார்த்திகை தீபத் திருவிழா பூர்வாங்க பணிகளை துவக்கும் விதமாக சென்ற மாதம் 23ஆம் தேதி பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது. தொடர்ந்து தீபத் திருவிழா உற்சவத்தில் வளம் வரும் வாகனங்கள் சீரமைத்தல், திருக்கோயில் பிரகாரங்கள் சீரமைப்பு போன்ற பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

அண்ணாமலையார் பெரிய தேர் புனரமைக்கப்பட்டு வருகின்ற 8 ம் தேதி வெள்ளோட்டம் நடைபெற்றது. தீபத் திருவிழாவிற்கான விரிவான ஏற்பாடுகள் கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த ஆண்டுக்கான காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 4 ம் தேதி கொடியேற்றத்துடன்தொடங்குகிறது.  கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ‘மலையே மகேசன்’ என போற்றப்படும் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையின் உச்சியில் வரும் டிசம்பா் 13-ஆம் தேதி மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படும். ஜோதி வடிவில் அண்ணாமலையார் காட்சி கொடுப்பார். வருடத்திற்கு ஒருமுறை குறிப்பிட்ட சில நிமிடங்கள் மட்டுமே காட்சி தருகின்ற அர்த்தநாரீஸ்வரர் , தீப மண்டபத்திற்கு எழுந்தருளி காட்சி தருவார். தொடர்ந்து, 11 நாட்களுக்கு மகா தீப தரிசனத்தை பக்தர்கள் காணலாம்.

ஏடிஜிபி ஆய்வு

இந்நிலையில் கோயில் மற்றும் மாட வீதி பகுதிகளில் பக்தர்கள் பாதுகாப்பு குறித்து ஏடிஜிபி தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

தீபத் திருவிழா அன்று சுமார் 30 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் வருவார்கள் என்பதாலும் பாதுகாப்பு நலன் கருதி போலீசார் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அண்ணாமலையார் கோயிலில் சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் துறை இயக்குனர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் மற்றும் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க், வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் தேவராணி, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தார் ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி உள்ளிட்ட காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பக்தர்கள் கோயிலுக்குள் வரும் வழிகள், வெளியே செல்லும் வழிகள், தீபத் திருவிழா அன்று கோயிலுக்குள் எவ்வளவு பக்தர்களை அனுமதிப்பது, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை ஆய்வு செய்தனர்.

முன்னதாக கோயிலுக்கு வருகை புரிந்த காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top