Close
நவம்பர் 14, 2024 10:18 மணி

பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு மதுரை அருகே சாலையில் சமையல் செய்யும் போராட்டம்..!

சமையல் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காட்டுநாயக்கன் சமுதாய மக்கள்

சமயநல்லூர்:

மதுரை பரவை அருகே பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆறாவது நாளாக மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உணவு சமைத்து உணவு வழங்கும் போராட்டம் செய்தனர்.

மதுரை மாவட்டம், பரவை அருகே உள்ளது சத்யமூர்த்தி நகர். பரவை பேரூராட்சிக்குட்பட்ட இங்கு 2000க்கும் மேற்பட்ட காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் படிக்கும் இவர்களது குழந்தைகளுக்கு இந்து காட்டு நாயக்கர் எனும் (ST)பழங்குடியினர் சாதி சான்றிதழ் கடந்த ஆண்டு வரை கொடுத்த வந்த நிலையில் தற்போது பல்வேறு காரணங்கள் கூறி மதுரை மாவட்ட நிர்வாகம் சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதாக கூறப்படுகிறது.

இதனால், தங்கள் குழந்தைகளுக்கு இந்து காட்டு நாயக்கர் (ST) பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என, வலியுறுத்தி பல்வேறு கட்டங்களாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அதில், முதல் இரண்டு நாளாக பள்ளிக்கு செல்லாமல் மாணவர்கள் பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தை பெற்றோருடன் சேர்ந்து நடத்தினர்.

மூன்றாம் நாளாக வேட்டையாடுதல் போராட்டமும், நான்காம் நாளில் உணவு சமைத்து உண்ணும் போராட்டத்தை சத்தியமூர்த்தி நகர் மந்தை திடலில் நடத்தினர். மேலும், ஐந்தாவது நாளாக நேற்று மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்த நிலையில், மதுரை மாவட்ட கோட்டாட்சியர் நேரில் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாத காரணத்தினால், மீண்டும் போராட்டத்தைத் தொடங்கினர். இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா போராட்டக் குழுவை அழைத்துபேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

அதிலும், உடன்பாடு எட்டாத காரணத்தால் போராட்டக் குழு இன்று ஆறாம் நாளாக மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உணவு சமைத்து உணவு வழங்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட காட்டு நாயக்கர் சமூகத்தினர் பள்ளி மாணவர்களுடன் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top