காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு மாவட்ட துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
இதில் அரசின் நலத் திட்டங்களில் பயன்பெற பல்வேறு பொதுமக்கள் அதிகளவில் வந்து பயன் பெற்று செல்கின்றனர்.
அவ்வகையில் ஒன்றான மாற்றுத்திறனாளிகள் நலத்துறை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கீழ் தளத்தில் செயல்பட்டு வருகிறது.
இங்கு வாரந்தோறும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வரும் நிலையில் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் தங்களது பதிவினை மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வகையில் இன்று நடைபெற்ற பதிவு முகாமில் நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் வருகை புரிந்துள்ளனர்.
இந்த அலுவலகம் அருகே இரண்டு கழிவறைகள் ஆண்கள் பெண்கள் என அமைந்துள்ளது. அவ்வகையில் ஆண்கள் கழிவறை பூட்டப்பட்டும் பெண்கள் கழிவறை திறந்து உள்ளது.
பெண்கள் கழிவறையை அலுவலக ஊழியர்கள் மட்டும் பயன்படுத்துவதாகவும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடன் வந்த உதவியாளர்கள் என யாரும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொதுக் கழிவறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு என பிரத்தியேகமாக இருந்தாலும், மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் இருந்து மீண்டும் 100 மீட்டர் தூரத்திற்கு மேல் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஆகவே அலுவலகம் அருகே உள்ள இந்த கழிவறைகளை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் மாற்றம் செய்தும், அவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதை அனைவரும் கோரிக்கையாக உள்ளது.