Close
நவம்பர் 15, 2024 3:59 காலை

டாக்டருக்கு கத்தி குத்து: காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்த அரசு மருத்துவர் சங்கம்

சென்னை அரசு மருத்துவமனையில் டாக்டர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து அரசு மருத்துவர்கள் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு சிறப்பு மருத்துவமனையில் இன்று காலை புற்று நோய் துறையில் பணியில் இருந்த  டாக்டர் பாலாஜி என்பவர் மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டார். கத்தி குத்தில் காயம் அடைந்த டாக்டர் பாலாஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கத்தியால் குத்திய நபர் மற்றும் அவருடன் வந்தவர்களை மருத்துவமனை ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் டாக்டர் பாலாஜியை கத்தியால்  குத்திய நபர் விக்னேஷ் என்பதும், பெரும்பாக்கத்தை சேர்ந்த இவர் தனது தாயார் காஞ்சனாவிற்கு சரியாக சிகிச்சை அளிக்க வில்லை என கூறி டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்தியதாகவும் போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற அரசு மருத்துவமனைக்கு தமிழக சுகாதார துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் வந்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில் விக்னேஷின் தாயார் இந்த மருத்துவமனையில் புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் டாக்டரின் எதிர்ப்பையும் மீறி அவர் வெளியேறி சென்றுள்ளார். தனியார் டாக்டர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் விக்னேஷ் இந்த செயலை செய்துள்ளார். விக்னேஷ் இந்த மருத்துவமனையில் ஏற்கனவே பணியாற்றியவர் என்பதால் எளிதாக வந்து இந்த காரியத்தை செய்துள்ளார் என்றார்.

முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் டாக்டர் பாலாஜி நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கத்தி குத்தில் காயம் அடைந்த மருத்துவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு அரசு டாக்டர்கள் தன்னலம், கால நேரம் பார்க்காமல் பணியாற்றி சிகிச்சை அளித்து வருகிறார்கள். எதிர்காலத்தில் அவர்களுக்கு இதுபோன்ற சம்பவம் நிகழ விடாமல் தடுத்து அவர்களது பாதுகாப்புக்கு இந்த அரசு உறுதி அளிக்கிறது என கூறி உள்ளார்.

இதற்கிடையில் கிண்டி அரசு மருத்துவர் மீதான கத்திக்குத்து சம்பவத்தை கண்டித்து அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவகல்லூரிகளில் அவசரகால சிகிச்சை, மற்றும் உயிர் பாதுகாப்பு சிகிச்சை தவிர்த்து அனைத்து துறை அரசு மருத்துவர்களும் காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.

அரசு மருத்துவமனையில் டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top