Close
நவம்பர் 15, 2024 2:33 காலை

சிவகங்கை அருகே மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்..!

நலத்திட்ட உதவிகளை வழங்கும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்

சிவகங்கை:

காளையார்கோவில் வட்டத்திற்குட்பட்ட மறவமங்களம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 2 பயனாளிகளுக்கு ரூ.24.73 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், மறவமங்களம் உள்வட்டம், மறவமங்களம் கிராமத்தில், நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்,சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன் முன்னிலையில் பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை, வழங்கி பேசுகையில்,

தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அனைத்துத்தரப்பு மக்களுக்கும் பயனடையும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில், அரசின் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தினை தேர்ந்தெடுத்து, அதிலுள்ள கடைக்கோடி கிராமத்திற்கு சென்று, பொதுமக்களின் கோரிக்கைகளைப் பெற்று, தகுதியுடைய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக ஒவ்வொரு மாதமும்
மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், இன்றையதினம் காளையார்கோவில் வட்டத்திற்குட்பட்ட மறவமங்களம் கிராமத்தில் நடைபெற்று கொண்டிருக்கும், இம்மக்கள் தொடர்பு முகாமின் மூலம் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் விரிவாக மக்களுக்கு எடுத்துரைத்துள்ளனர்.

இம்மக்கள் தொடர்பு முகாமினை முன்னிட்டு, முன்னதாக பொதுமக்களின் தேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பாக கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அதில் தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அம்மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் இன்றைய தினம் வழங்கப்படவுள்ளன.

இன்றைய தினம் இம்முகாமின் வாயிலாக பெறப்படும் கோரிக்கை மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்டு உரிய பலன்கள் வழங்கப்படும்.மேலும், இவ்வூராட்சியை பொறுத்த வரையில், இப்பகுதியில் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிவருவது மட்டுமன்றி, அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இதுதவிர, தங்களது கிராமத்தினை மாதிரி கிரமமாக உருவெடுக்கும் வகையில் அனைத்திலும் சிறந்து விளங்கிடும் வகையில் கிராம மக்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இருந்திட வேண்டும். கிராமங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறுதொழில்களும் அடிப்படையாக அமைகின்றன.

இளைஞர்கள் தொழில் தொடங்கி பிறருக்கு வேலைவாய்ப்பினை வழங்கிடுவதற்கு முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதற்கான அரசின் மானியத்துடன் கூடிய திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை பெறுவதற்கு துறை சார்ந்த அலுவலகங்களை முறையாக அணுகி, அதன் வாயிலாக தாங்களும் பயன்பெற்று கிராமங்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்திட வேண்டும்.

மேலும், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதன் வாயிலாக அவர்களின் வாழ்வாதாரமும் மேம்படுத்துவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசின் அனைத்து நலத்திட்டங்களை பெறுவதற்கு, இணையதள வாயிலாக விண்ணப்பங்களை அளிக்கலாம். அதற்கென இ-சேவை மையங்களையும் மற்றும் வீட்டிலிருந்தபடியே தங்களது அலைபேசி மற்றும் கணினி ஆகியவைகள் மூலம் இணையதள வாயிலாகவும், விண்ணபித்து பயன்பெறலாம்.

விண்ணப்பித்த மனுக்களின் நிலை குறித்தும், அதன் மீது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் இணையதளத்தின் வாயிலாகவே அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கென்று சம்மந்தப்பட்ட அரசு
அலுவலகங்களை நேரில் நாட வேண்டியதில்லை.

மேலும், தற்போது கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ள பல்வேறு கூடுதல் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்தார்.

முன்னதாக, இம்மக்கள் தொடர்பு முகாமில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த செயல்விளக்க கண்காட்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில், 06 பயனாளிகளுக்கு தலா ரூ.21,000வீதம் மொத்தம் ரூ.1,26,000 மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டா ஆணைகளையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 26 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 26 பயனாளிகளுக்கு ரூ.3,25,250/- மதிப்பீட்டிலான மாற்றுத்திறனாளி உதவித்தொகை, விதவை உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை ஆகியவைகளுக்கான ஆணைகளையும்,

06 பயனாளிகளுக்கு வாரிசு சான்று, விதவைச் சான்று, ஆண் குழந்தை இல்லை சான்று, சிறு குறு விவசாயி சான்று, ஆதரவற்ற விதவைச் சான்று போன்ற வருவாய்த்துறை சான்றுகளையும், 07 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் முழுப்புலத்திற்கான, ஆணைகளையும்,

12 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உட்பிரிவிற்கான ஆணைகளையும், 17 பயனாளிகளுக்கு புதிய மின்னனு குடும்ப அட்டைகளையும்,
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 08 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.34,420/- மதிப்பீட்டிலான மோட்டார் பொருத்தப்பட்ட இலவச தையல் இயந்திரங்கள் மற்றும் இலவச காதொலி கருவிகளையும்,

மகளிர் திட்டத்தின் சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூ.7,50,000/- மதிப்பீட்டிலான மகளிர் சுய உதவிகுழு கடனுதவிகளையும், தோட்டக்கலைத்துறை சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.12,120/- மதிப்பீட்டிலான மிளகாய் நாற்றுகள் மற்றும் பழமரக்கன்றுகள் தொகுப்புகளையும்,

வேளாண்மைத்துறை சார்பில் 07 பயனாளிகளுக்கு ரூ.20,612/- மதிப்பீட்டிலான பேட்டரி தெளிப்பான்கள், ஜிங்க் சல்பேட் மற்றும் உளுந்து ஆகியவைகளையும், கால்நடைத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.500/- மதிப்பீட்டிலான தாது உப்புக் கலவைகளையும், என்.என.190 மறவமங்களம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.10,57,000/-மதிப்பீட்டிலான பயிர் கடனுதவிக்கான ஆணைகளையும்,

தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூ.1,35,000/- மதிப்பீட்டிலான திருமணம் மற்றும் இயற்கை மரணம் உதவித்தொகைக்கான ஆணைகளையும், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் 06 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.12,000/- மதிப்பீட்டிலான ஊட்டச்சத்து பெட்டகங்களையும் என ஆக மொத்தம் 132 பயனாளிகளுக்கு ரூ.24,72,902/- மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கோ.ராஜேஸ்வரி, ஊராட்சி மன்றத்தலைவர்கள் அன்பழகன் (மறவமங்களம்), சாந்தா கருப்புசாமி (உசிலங்குளம்), ராஜகோபால் (சிரமம்), காளையார்கோவில் வட்டாட்சியர் முபாரக் மற்றும் அனைத்து துறை அரசு முதல்நிலை அலுவலர்கள், பொதுமக்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top