திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற அன்னாபிஷேகத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் அன்னாபிஷேகமும் ஒன்றாகும். அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆகம விதிகளின்படி ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திர தினத்தன்று உலக உயிர்களுக்கு உணவு அளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அன்னாபிஷேக விழா நடக்கிறது. அன்னபூரணி சிவபெருமானுக்கு அன்னமிட்ட தினம், ஐப்பசி மாத பௌர்ணமி ஆகும். எனவேதான் அன்றைய தினம் சிவபெருமானுக்கு, அன்னபிஷேகம் செய்யப்படுகிறது. சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அதனால் அவருக்குப் பதினொரு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். அந்த அபிஷேகங்களில் மிகவும் சிறப்பானது, அன்னாபிஷேகம்.
அந்த நிகழ்வின் போது சிவலிங்கத்தை முழுவதுமாக அன்னத்தினால் மூடி அலங்கரித்து வழிபாடு செய்கின்றனர். அந்த அன்னம் பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
சோறு கண்ட இடம் சொர்க்கம்
இறைவனுக்கு எத்தனையோ அபிஷேகம் செய்யப்பட்டாலும் அன்னாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது என புராணங்கள் சொல்லுகிறது சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம்.
இந்த அன்னாபிஷேகத்தை பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் இதைத்தான் “சோறு கண்ட இடம் சொர்க்கம்” என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
கல்லினுள் வாழும் தேரை முதல் கர்ப்பப்பையில் வளரும் உயிர்வரை அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிப்பவன் ஈசன் அதனால் அன்னத்தைப் பற்றி அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ’ என்று சாமவேதத்தில் குறிப்பிடப்படுகிறது.
‘எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருக்கிறான்’ என்பதே இதன் பொருள்.
இந்த ஆண்டிற்கான அன்னாபிஷேக விழா இன்று மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது.
மூலவர் அருணாச்சலேஸ்வரருக்கும், அருணாசலேஸ்வரா் கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரா் கோயில் மூலவருக்கும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா் . சிவனுக்கு படைக்கப்பட்டிருந்த அன்னம், பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
வெண்ணெய் கலந்த சாதத்தால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்த சிவபெருமான் கல்யாண சுந்தரேஸ்வரர் மற்றும் அருணாச்சலேஸ்வரரை மாலை 6:00 மணிக்கு பிறகு ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
அதேபோல் கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் மற்றும் அஷ்ட லிங்க சன்னதிகளிலும் அன்னாபிஷேகம் நடைபெற்று வருகிறது இக்கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தரிசனம் ரத்து
அன்னாபிஷேகம் நடைபெறுவதையொட்டி அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மாலை 3 மணி முதல் 6 மணி வரை தரிசனம் ரத்து செய்யப்பட்டு இருந்தது. கோயிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை தற்போது ஆறு மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் இதனால் ஏராளமான பக்தர்கள் நீண்ட நேரம் கோயிலுக்கு வெளியே காத்திருந்தனர்.