திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாயையொட்டி திருவண்ணாமலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும்,, நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், ஞான தபோதனரை வா வென்று அழைக்கும் மலை அண்ணாமலை, சைவத்தின் தலைநகரம் என பல சிறப்புகள் பெற்றது திருவண்ணாமலை.
ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நிலையில் இந்த ஆண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 1ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. டிசம்பர் 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 13ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் அன்று மாலை மகாதீபமும் ஏற்றப்படு கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, டிசம்பர் 10 ஆம் தேதி திருத்தேர் திருவிழா நடைபெற உள்ளது. இந்த தீபத்திருவிழாவில் சுமார் 40 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களுக்கு தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், தலைமைச்செயலாளர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் சிறப்பு ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இதில் விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. அப்போது பக்தர்களுக்கு போதிய போக்குவரத்து, குடிநீர், மருத்துவம், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து துறைகளுக்கும் தலைமைச் செயலாளர் முருகானந்தம் அறிவுறுத்தினார்.
திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக கூடுதலான பேருந்துகள் மற்றும் இணைப்பு சிற்றுந்துகள் இயக்கவும் கூடுதலான தொடர்வண்டி சேவை வழங்க நடவடிக்கை எடுக்கவும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களை முன்னதாகவே பொது மக்கள் அறியும் வகையில் வெளியிடவும் முடிவெடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர்கள், அரசு முதன்மைச் செயலாளர்கள், உள்துறை, இந்து சமய அறநிலையத் துறை, வருவாய் துறை, போக்குவரத்து துறை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உள்ளாட்சி துறை, சுகாதாரம் குடும்ப நலத்துறை மற்றும் பொதுத்துறை ஆகிய துறைகளின் செயலாளர்கள், காவல் துறை இயக்குநர், காவல் துறை தலைவர் நுண்ணறிவு, காவல் துறை தலைவர் வடக்கு மண்டலம், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், மற்றும் காவல் கண்காணிப்பாளர் , மாநகராட்சி ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.