திருவண்ணாமலை மாவட்டம் அய்யம்பாளையம் ஊராட்சியில் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் பணிகள் சார்பாக ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தை துவக்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் அய்யம்பாளையம் ஊராட்சியில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் கம்பன் ஆகியோர் முன்னிலையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இத்திட்டத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில்;
நமது மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் கடுமையாக பாதிக்கப்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு உடைய ஆறு மாதம் முதல் ஆறு வயதுள்ள குழந்தைகளுக்கு 56 நாட்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் உணவு சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது.
மேலும் ஊட்டச்சத்து குறைபாடு உடைய 0 வயது முதல் ஆறு வயதுடைய குழந்தைகளுக்கு இரண்டு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
தற்போது முதலமைச்சர் ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற திட்டத்தை இரண்டாம் கட்டமாக தொடங்கி வைத்ததை தொடர்ந்து நமது திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு இரண்டாவது ஊட்டச்சத்து பெட்டகமும் மிதமாக பாதிக்கப்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு ஒரு ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்பட்டு இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள்.
நலமான குழந்தைகள் வளமான தமிழ்நாடு என்ற அடிப்படையில் மருத்துவக் குழு மூலம் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கும் மற்றும் ஊட்டச்சத்து உதவி தேவைப்படும் குழந்தைகள் கண்டறியப்பட்டு உயர் சிகிச்சைய்க்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
கருவுற்ற தாய்மார்கள் நல்ல உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும், பழங்களை ஜூஸாக சாப்பிடுவதை காட்டிலும் பழங்களாகவே சாப்பிடுவது உடலுக்கு நல்லது. நோய்வாய்ப்பட்ட காலத்தில் நமது உடலுக்கு விரைவாக ஆற்றல் வேண்டும்.
காய்கறிகளை முறையாக சுத்தம் செய்து சமைக்க வேண்டும். சிறு தானிய உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அது மிகச்சிறந்த உணவாகும். கீரை வகைகளை உணவில் எடுத்துக் கொள்ளுங்கள். அசைவ உணவு சாப்பிடாதவர்களுக்கு அசைவ உணவில் இருக்கின்ற எட்டு அமினோ அமிலங்கள் முருங்கைக் கீரையில் உள்ளது. ஹீமோகுளோபின் அளவினை சரி செய்து கொள்ளுங்கள். கருவுற்ற தாய்மார்கள் மட்டுமல்லாது வளரிளம் பெண்களுக்கும் ஹீமோகுளோபின் பிரச்சனை ஏற்படுகிறது. குழந்தை திருமணத்தை முற்றிலுமாக தவிர்த்துக் கொள்ளுங்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் நலமான குழந்தைகள் வளமான தமிழ்நாடு என்ற அடிப்படையில் இத்திட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
கருவுற்ற தாய்மார்கள் உடல்நிலையை நன்றாக வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கும் சத்தான உணவினை கொடுக்க வேண்டும். நமது மாவட்ட குழந்தைகள் அடுத்த இரண்டு மாதத்திற்குள் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியினை பார்வையிட்டு தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், சமூக நல அலுவலர் சரண்யா, ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலைமணி, ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.