திருவண்ணாமலையில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவியர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், கீழ் நாச்சி பட்டு காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பாக நடைபெற்ற அரசு மாணவர்களுக்கான கலைத் திருவிழாவினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
தமிழக அரசின் ஆணையின்படி மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதல்படியும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் தமிழகத்தில் கலை மற்றும் பண்பாடு வடிவங்களையும் கலை மரபுகளையும் அறிந்து வெளிப்படுத்தும் வகையில் பல்வகை போட்டிகள் பள்ளி அளவிலும் வட்டார அளவிலும் நடைபெற்றன.
இந்தப் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான கலைத் திருவிழா போட்டிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் போட்டிகள் அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் என மூன்று பிரிவுகளாக நடத்தப்படுகிறது.
வட்டார அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் முதலிடம் பெற்றவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளும் வகையில் மூன்று நாட்கள் போட்டிகள் நடத்தப்பட்டன.
ஓவியப்போட்டி, சிற்பம் செதுக்குதல், பல்வகை நடன போட்டிகள், பல்வகை கருவிகள் இசைத்தல், இலக்கிய நாடகங்கள் ,சமூக நாடகங்கள், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, முதலான 84 கலை போட்டிகள் நடத்தப்பட்டன.
காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
மாவட்டத்தின் 18 ஒன்றியங்களில் இருந்து மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
இப்போ போட்டிகள் முதல் நாள் டேனிஷ் மிஷன் தொடக்கப்பள்ளியிலும், இரண்டாவது நாள் போளூர் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், மூன்றாம் நாள் திருவண்ணாமலை காந்தி நகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றது.
திருவண்ணாமலை காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலை திருவிழா போட்டிகளை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு மாணவர்களை வாழ்த்தினார்.
மாவட்ட அளவில் முதலிடம் பெரும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவர்.
அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் வட்டார கல்வி அலுவலர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்றுனர்கள் மாவட்ட கலைத் திருவிழா அமைப்புக்குழுவினர் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சத்யா, காந்திநகர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஷ் குமார்,ஆசிரியர்கள், மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.