விவசாயி வீட்டுப் பிள்ளையாக பிறந்த எனக்கு தான் ரேஷன் கடையை பற்றி நன்றாக தெரியும் என கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் 71 வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா திருவண்ணாமலை வேங்கி காலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை , சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன், அம்பேத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் பார்த்திபன் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, கலந்துகொண்டு 2 கோடியே 40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார் . மேலும் 13 கோடியே 67 லட்சம் மதிப்பில் 1885 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் , ரூபாய் 45 லட்சம் மதிப்பில் புதியதாக வாங்கப்பட்டுள்ள வேளாண் இயந்திரங்களை கூட்டுறவு நிறுவனத்திற்கும் வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது;-
அனைவருக்கும் பொதுவான அமைப்பாக இந்த கூட்டுறவு சங்கம் அமைந்துள்ளது. இதனால் தான் கூட்டுறவு சங்கம் வானவில் போன்று உள்ளது என்று அண்ணா கூறினார் .பெரியார், கருணாநிதி போன்ற பெரும் தலைவர்கள் எல்லாம் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருந்துள்ளனர். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ரூபாய் 7000 கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்த வரலாறு வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.
இன்றைக்கு நமது தமிழக முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சிக்கு வந்த உடனே பதினாறு லட்சத்து 43 ஆயிரத்து 347 விவசாயிகளுக்கு கடன் நிலுவைத் தொகை ரூபாய் 12 ஆயிரத்து 10 கோடி தள்ளுபடி செய்து ஆணை பிறப்பித்தார். பொது நகை கடன் தள்ளுபடியாக 37 ஆயிரத்து 127 பயனாளிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
நான் உணவுத்துறை அமைச்சராக இருந்தபோது 23 திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தியமைக்காக உச்சநீதிமன்றமே பாராட்டு தெரிவித்தது. தமிழ்நாட்டில் உள்ள பொது விநியோக திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என சொன்னதோடு என்னையும் முதலமைச்சரையும் உச்ச நீதிமன்றம் பாராட்டியது.
திமுக ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் கூட்டுறவு துறைக்கு உந்து சக்தியாக இருந்திருக்கிறோம். கூட்டுறவு இயக்கங்களுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறோம். அத்தனை உதவிகளையும் கழக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. அந்த ஆட்சிக்கு அதில் பணியாற்றிக் கொண்டிருக்கிறவர்கள் உறுதுணையாக இருந்திட வேண்டாமா. ஒரு ஆட்சிக்கு நல்ல பெயரை வாங்கி தருவது உங்கள் கையில் தான் உள்ளது.
விவசாயி வீட்டு பிள்ளையாக கிராமத்தில் நான் பிறந்ததால் தான் ரேஷன் கடையை பற்றி அதிகமாக உணர்ந்திருக்கிறேன் . பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்கு இதெல்லாம் புரியாது.
திருவண்ணாமலையில் இருந்து முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிற ஒரு கிராமத்தில் விவசாய வீட்டுப் பிள்ளையாக பிறந்த என்னைப் போன்றவர்களுக்கு தான் மேடு பள்ளங்கள் தெரிவதற்கு வாய்ப்பு உண்டு.அனுபவம் உண்டு.
2007 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் பொது விநியோக திட்டத்தில் பாமாயில், துவரம் பருப்பு கொண்டு வருவதற்கு காரணமாக இருந்தது நான் .இது போன்ற திட்டங்கள் மக்களுக்கு கொண்டு செல்கின்ற பாலமாக அமைந்துள்ளது கூட்டுறவு இயக்கங்கள். கூட்டுறவுத்துறைக்கு தேவையான அத்தனை உதவிகளையும் அரசு செய்து வருகின்றது.
இவ்வாறு அமைச்சர் எவ வேலு பேசினார்.
விழாவில் மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் ,மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு பிரதிநிதி ஸ்ரீதரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, ஒன்றிய குழு தலைவர்கள், கூட்டுறவு வங்கி மேலாளர்கள், துணைப் பதிவாளர்கள், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.