ஐதராபாத்தில் கைது செய்வதற்கு முன்பாக, நடிகை கஸ்தூரி பேசி வெளியிட்ட வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதுாறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஐதராபாத்தில் இருந்த நடிகை கஸ்தூரியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரான அவரை, நவம்பர் 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில், அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையின் போது, தான் தலைமறைவாக இருந்ததாக வெளியான செய்தி பற்றி, நடிகை கஸ்தூரி விளக்கம் கொடுத்து பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: நான் ஐதராபாத்தில் தான் வசிக்கிறேன் என்பது எல்லோருக்கும் தெரியும். தினமும் இங்கு ஷூட்டிங் இருக்கிறது. நான் தலைமறைவு என்பது எல்லாம் கிடையாது. என்னுடைய செல்போன் என்னிடம் இல்லை. என்னுடைய வக்கீலிடம் தான் உள்ளது. மன உளைச்சல் அதிகமாக இருந்தது, பத்திரிக்கையாளர் தொடர்ந்து போன் செய்ததால், வாங்கி வைத்து கொண்டார். இப்போது கூட இந்த வீடியோவை வேறு ஒருவரின் செல்போனில் தான் பதிவு செய்தேன். நான் எப்போதும் ஓடி ஒளிய மாட்டேன்.
ஷூட்டிங் முடிந்து வந்த பிறகு, என்னுடைய ஒத்துழைப்பின் பேரிலேயே போலீசார் என்னை சென்னை அழைத்து வந்தனர். மீடியாவில் என்னை தலைமறைவு, பயந்து ஓடினேன், என வெளியிட்டு வருகின்றனர். இதுவரையில் எந்த விதிமீறலும் செய்யவில்லை, இனியும் செய்ய மாட்டேன். எனக்கு பயம் எல்லாம் இல்லை. தலைமறைவு என்று வெளியாகும் செய்திகளுக்கு இதுவே முற்றுப்புள்ளி என கூறியுள்ளார்