Close
நவம்பர் 21, 2024 2:59 மணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக பணிகளை கள ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர்கள்..!

நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் கே பி முனிசாமி

அதிமுக பொதுச் செயலாளர்  கே.பழனிசாமி உத்தரவின்பேரில், திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவின் பணிகளை   கழகத் துணைப் பொதுச் செயலாளர் கே. பி.முனுசாமி, கழக செய்தி தொடர்பாளர் பா. வளர்மதி , ஆகியோர்   மாவட்டத்தில் நடைபெற்றுள்ள அதிமுகவின் பணிகளை கள ஆய்வு மேற்கொண்டனர்.

திருவண்ணாமலையில் அதிமுக பணிகளை  கள ஆய்வு செய்த அவர் பின்னர் கே. பி.முனுசாமி  செய்தியாளர்களிடம் கூறும்போது,

நடிகர் விஜய் கட்சி தொடங்கி உள்ளார். அவரது ரசிகர்கள் தொண்டர்களாக மாற வேண்டும். மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். நீண்ட தூரம் அவர், அரசியலில் பயணிக்க வேண்டும். அப்போதுதான், அரசியல் ரீதியாக தலைவர் என்ற அங்கீகாரத்தை பெற முடியும். மக்களையும், அரசியல் கட்சிகளையும் திசை திருப்பும் நோக்கத்தில் ஆட்சியில் பங்கு என்று விஜய் சொல்லியிருக்கலாம்.

அரசு பணத்தில் முதல்வர் ஸ்டாலின் தனது தந்தைக்கு விழா எடுத்து வருகிறார். மேலும் தேவையில்லாத இடங்களில் கட்டிடம் கட்டி, அவருடைய பெயரை வைத்து வருகிறார். தந்தையின் நினைவிடத்தில் பல நூறு கோடி செலவு செய்து விழா எடுத்தார். பல இடங்களில் கட்டிடம் கட்டி, அவரது தந்தையின் திருவுருவ சிலையை வைத்து விழா எடுத்து வருகிறார். இப்படிதான் அரசு பணம், மக்களின் வரிப்பணம் விரயமாகிறது.

திமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் தனது பொறுப்புக்கு ஏற்றவாறு தகுதியாக பேச வேண்டும். 80 ஆண்டு காலம் உழைத்த தனது தாத்தாவின் பெயரை ஏன் வைக்கக்கூடாது என்கிறார். அதிமுக தலைவரை பற்றி பேசுவதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு அறுகதை கிடையாது. சாதாரண நிலையில் இருந்து உழைத்து, தொண்டர்களுடன் இணைந்து செயலாற்றி பொதுச் செயலாளர் பதவிக்கு வந்துள்ளார்.

திமுகவில் மு.கருணாநிதி உழைத்தார். அவரது மகன் மு.க.ஸ்டாலின், பேரன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாரிசு என்பதால் பதவி வழங்கப்பட்டது. மு.கருணாநிதிக்கு அடுத்த நிலையில் இருந்த அமைச்சர் துரைமுருகன் இப்போது எந்த இடத்தில் இருக்கிறார்? உழைத்து பதவிக்கு வந்தவர் கே.பழனிசாமி.

பாஜகவுடன் கூட்டணி இல்லை

எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி அறிவித்துவிட்டார். அதிமுக 53-வது ஆண்டில் பயணித்து வருகிறது. 2 கோடி தொண்டர்களை நம்பி, தேர்தல் களத்தில் கே.பழனிசாமி போட்டியிடுகிறார். திடீரென கருத்தை சொல்லிவிட முடியாது. அப்படியே சொல்ல வேண்டும் என்றால் கூடி பேசி முடிவெடுத்துதான் சொல்ல முடியும்.  அதிமுக தற்போது எதிர் கட்சியாக உள்ளது. மீண்டும், ஆளுங்கட்சியாக வரும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர்  ராமச்சந்திரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பெருமாள் நகர் ராஜன், கீழ்பெண்ணாத்தூர் ஒன்றிய கழக செயலாளர் பாஷ்யம், திருவண்ணாமலை நகர செயலாளர் செல்வம், மற்றும் ஒன்றிய கழக செயலாளர், நிர்வாகிகள் அனைத்து நிலை உறுப்பினர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top