உலக பாரம்பரிய வார விழாவையொட்டி காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோயில் வெளிநாட்டு மற்றும் வெளி மாநில பக்தர்கள் சிற்பக்கலையை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
திருக்கோயில் வளாகத்தில் ஒளி, ஒலி அமைப்புடன் காஞ்சிபுரம் தொல்லியல் திருக்கோயில் சிற்பக்கலைகள் குறித்த தகவல்கள் தெரிவிக்கும் வகையில் அரங்கம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
உலக பாரம்பரிய வார விழா ஆண்டுதோறும் நவம்பர் 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த தினம், சுற்றுலா பயணிகள், பொதுமக்களிடையே தங்களது சமூக கலாச்சார பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும், பாரம்பரிய பெருமை கொண்ட இடங்களை பாதுகாக்கவும் அவற்றின் மீது அக்கறை கொள்ளவும் தூண்டுகிறது. இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்தில் இன்று ஒருநாள் மட்டும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புராதன சின்னங்களை இலவசமாக சுற்றி பார்க்கலாம் என தொல்லியல் துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதேபோல் காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற கைலாசநாதர் கோயில் காலையில் வெளிநாட்டு மற்றும் வெளி மாநில பக்தர்கள் ஆர்வமுடன் திருக்கோயிலில் உள்ள சிற்பங்களை கண்டு களித்தும் அதனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மேலும் திருக்கோயில் குறித்த வரலாற்றையும் சுற்றுலா வழிகாட்டி அவர்களுக்கு தெரிவித்தனர்.
காஞ்சிபுரத்திலுள்ள பாரம்பரிய தொல்லியல் திருக்கோயில்கள் குறித்த அரிய வகை செய்திகளை அனைத்து மொழியிலும் அறிந்து கொள்ளும் வகையில் ஒலி , ஒளி அமைப்புடன், திருக்கோயில் வளாகத்தில் அமைக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.