மதுரை பாலமேடு அருகே, வளையப்பட்டி ஊராட்சியில், உணவுக் கூடம் மற்றும் கலையரங்கத்தை திறந்து வைக்க
வருகை தந்த பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் சோழவந்தான் வெங்கடேசன் எம்.எல். ஏ. வை நல்ல குடிநீர் கேட்டு, பொது மக்கள் முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே, வளையப்பட்டி ஊராட்சியில், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட உணவு கூடம் மற்றும் கலையரங்கம்
திறந்து வைப்பதற்கு இன்று காலை 11 மணிக்கு பத்திரப்
பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் சோழவந்தான் வெங்கடேசன் எம். எல். ஏ. ஆகியோர் வருகை
தந்தனர். வலையபட்டி மஞ்சமலை கோவில் அருகில்
இருந்த உணவு கூடத்தை திறந்து வைத்த பின்பு, வலையபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அரசம்பட்டியில் உள்ள கலையரங்கத்தை திறந்து வைத்து விட்டு வெளியே வந்த போது அங்கு கூடியிருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் அமைச்சரின் காரை முற்றுகையிட்டு நல்ல குடிநீர் வரவில்லை சுமார் 4 ஆண்டுகளாக தண்ணீர் உப்புத் தண்ணீர் தான் உள்ளது. இது குறித்து, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் எம்எல்ஏவிடம் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. உப்பு தண்ணீரை குடிப்பதால், சிறுநீரக கோளாறு ஏற்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கு செல்ல வேண்டியநிலை ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்படுகிறது . காவேரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் நல்ல தண்ணீரை எங்கள் கிராமத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.
மேலும் அங்கிருந்தவர்கள் வெற்றி பெற்று சென்ற பிறகு இதுவரை ஒரு முறை கூட எங்கள் ஊருக்கு எம்எல்ஏ வரவில்லை என்று அமைச்சரிடம் புகார் கூறினார்கள்.
அரசு விழாவிற்கு வந்த அமைச்சர் மூர்த்தி மற்றும் வெங்கடேசன் எம்எல்ஏ வை கிராம மக்கள் முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.