போளூா் ஒன்றியம், கன்னிகாபுரம் கிராமத்தில் குட்டையை ஆழப்படுத்தும் பணியை செய்யவிடாமல், பொக்லைன் இயந்திரம் மூலம் அதை செய்துகொள்ளலாம் எனக் கூறி, ரூ.250 பணம் வசூலிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஊரக வேலை திட்டப் பணியாளா்கள் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூா் ஒன்றியம், கன்னிகாபுரம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ஏரி பகுதியில் உள்ள குட்டையை ஆழ்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணிக்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணியாளா்களுக்கு கடந்த சில வாரங்களாக ஏரிப்பகுதியில் உள்ள குட்டையை ஆழப்படுத்தும் பணி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பணித்தள பொறுப்பாளா்கள், ஊராட்சிச் செயலா் ஆகியோா் குட்டையை ஆழப்படுத்த சிரமப்பட வேண்டாம் என்றும், பொக்லைன் இயந்திரம் மூலம் குட்டையை அழப்படுத்திவிடலாம் என்று கூறி, அதற்காக நபருக்கு ரூ.250 வீதம் வற்புறுத்தி வசூலிப்பதாகவும் ஊரக வேலைத் திட்டப் பணியாளா்கள் குற்றஞ்சாட்டினர்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) ஒன்றியச் செயலாளர் சுந்தரேசன் தலைமையில் ஊரக வேலைத் திட்ட பணியாளா்கள் 30-க்கும் மேற்பட்டோா் போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு வாகனம் மூலம் வந்து வட்டார வளா்ச்சி அலுவலா் பாபுவிடம் மனு அளித்தனா்.
அந்தக் கோரிக்கை மனுவில் அடையாள அட்டை உள்ள அனைத்து ஊரக வேலைத் திட்டப் பணியாளா்களுக்கும் வேலை வழங்க வேண்டும். அரசு அறிவித்த நாளொன்றுக்கான கூலி ரூ.319 வழங்க வேண்டும். குட்டையை ஆழப்படுத்தும் பணியை தடுக்கும் ஊராட்சிச் செயலா், பணித்தள பொறுப்பாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனா்.
இந்நிகழ்வின்போது இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாவட்டத் தலைவா் சிவா, மாவட்டச் செயலா் ரவிச்சந்திரன், மாவட்டக் குழுவைச் சோ்ந்த ராமசாமி, ஏழுமலை, சங்கா், கண்ணபிரான், பணியாளர்கள் உடனிருந்தனா்..