பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும்,, நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், ஞான தபோதனரை வா வென்று அழைக்கும் மலை அண்ணாமலை, சைவத்தின் தலைநகரம் என பல சிறப்புகள் பெற்றது திருவண்ணாமலை.
ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நிலையில் இந்த ஆண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 1ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. டிசம்பர் 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 13ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் அன்று மாலை மகாதீபமும் ஏற்றப்படு கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, டிசம்பர் 10 ஆம் தேதி திருத்தேர் திருவிழா நடைபெற உள்ளது. இந்த தீபத்திருவிழாவில் சுமார் 40 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களுக்கு தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் தீபத் திருவிழாவுக்காக தற்காலிகப் பேருந்து நிலையங்கள், காா் நிறுத்தும் வசதிகளை செய்வது குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில்
திருவண்ணாமலை நகரைச் சுற்றி எத்தனை இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைப்பது, எத்தனை இடங்களில் காா் பாா்க்கிங்குள் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை மேற்கொண்டும், பேருந்து நிலையங்கள், தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் கார் பார்க்கிங் பகுதிகளில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதிகளை செய்ய வேண்டும், மின்விளக்குகள் பொருத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி உரிய உத்தரவுகளை வழங்கினார்.
மேற்கண்ட இடங்களில் கூடுதல் பாதுகாப்பு பணியினையும் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் காந்திராஜன், கோயில் இணை ஆணையா் ஜோதி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், காவல்துறையினா் பலா் கலந்து கொண்டனா்.