உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நெகிழி பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் நகராட்சி நிர்வாகத்தினர் தீவிர சோதனை நடத்தி – ஒரே வாரத்தில் 1 லட்சம் வரை அபராதமும், 1200 கிலோ நெகிழி பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகள் மற்றும் உசிலம்பட்டி நகர் பகுதியில் நெகிழி பயன்பாட்டை தடுக்கும் நோக்கில், வணிக வளாக கடைகள், பூக்கடைகள், ஜவுளிக்கடை என, ஆயிரக்கணக்கான கடைகளில் கடந்த ஒரு வார காலமாக உசிலம்பட்டி நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் நெகிழி பயன்படுத்தி வரும் கடைகளிடம், பொருட்களை பறிமுதல் செய்வதுடன், அபராதமும் விதித்து எச்சரிக்கை செய்து வருகின்றனர்.
அவ்வாறு இந்த ஒரு வார காலத்தில் உசிலம்பட்டி நகர் பகுதியில் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 1 லட்சம் வரை அபராதமும், 1200 கிலோ நெகிழி பை மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
நெகிழிக்கு பதிலாக மஞ்ச பை பயன்படுத்த வேண்டும் எனவும், பொதுமக்களும் பொருட்கள் வாங்க வரும் போது மஞ்சள் பை அல்லது கட்டை பை களை எடுத்து வந்து பொருட்களை வாங்கி செல்ல வேண்டும் என, வேண்டுகோளும் விடுத்து வருகின்றனர்