Close
நவம்பர் 22, 2024 5:32 காலை

‘எங்கெங்கு காணினும் சக்தியடா‘: டெல்லியில் மகளிர் மாநாடு நடத்திய திருச்சி காரர்

டெல்லியில் பெண்களின் மாதவிடாய் சுகாதாரம் தொடர்பான உச்சிமாநாடு நடைபெற்றது.

உலகில் இன்று பெண்களின் உரிமைகளுக்காக பல்வேறு அமைப்புகள் உள்ளன. பெண்களுக்கு கல்வி அறிவு புகட்டுதல், அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்துதல், ஆட்சி அதிகாரரத்தில் பங்களிப்பிற்காக இந்த அமைப்புகள் பல்வேறு இயக்கங்களையும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், போராட்டங்களைய]ம் நடத்தி வருகின்றன. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

ஆனால் நமது நாடு சுதந்திரம் அடைவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே உலகின் பல நாடுகள் பெண்களை அடிமை போல நடத்திய கால கட்டத்திலேயே பெண்களுக்காக பல புரட்சி பாடல்களை எழுதியவர் பாட்டுக்கொரு புலவன் பாரதி. பாரதி கண்ட புதுமை பெண் புத்தகத்தில் அவர் எழுதிய எழுத்துக்கள் தீர்க்க தரிசனமாகவே கருதப்படுகிறது.  காரணம் இன்று நமது நாட்டில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக கல்வி, பொருளாதாரம் மற்றும் அதிகாரத்தில் கோலோச்சி வருகிறார்கள்.

அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது, அக்தினும் மாதராய் பிறப்பது அரிதினும் அரிது என்றார் ஒளவை பிராட்டியார். அத்தகைய பெருமைக்குரிய பெண்ணினம் சமூகத்தில் உயர்நிலையை அடைய பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியது உள்ளது. இந்த பிரச்சினைகளை அகம், புறம் என இரண்டு வகையாக பிரிக்கலாம்.

பொது இடத்தில் பெண்களுக்கு எதிரான கேலி, கிண்டல், பாலியல் வன்முறை போன்றவை புறம் பகுதியில் வருகிறது. அகம் என எடுத்துக்கொண்டோமானால் இயற்கையாகவே அவர்களது உடல் அமைப்பில் உள்ள பிரச்சினைகள். இந்த பிரச்சினைகளில் முதலிடத்தை பிடிப்பது மாதவிடாய்.

ஒரு பெண் குழந்தை பூப்பெய்திய நாளில் இருந்து மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிற்கும் காலமான சுமார் ஐம்பது வயது வரை அவர்கள் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நேரத்தில் அதனால்  தங்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான  சங்கடங்களை சமாளிக்க படாத பாடு படவேண்டியது உள்ளது.

பீரியட்ஸ் எனப்படும் மாதவிடாய் காலத்தில் அவர்கள் கடந்த காலங்களில் அறியாமை காரணமாக பழைய துணிகளையும், கிழிந்த புடவைகளையும் பயன்படு்த்தி வந்த நிலை மாறி தற்போது விதவிதமான நாப்கின்களை பயன்படுத்துகிறார்கள். தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் இந்த நாப்கின்கள் தொடர்பாக ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் அவற்றை பயன்படுத்தும் வகையில் அவர்களை ஈர்க்கிறது.

இப்படி பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் நாப்கின்கள்  குப்பை தொட்டிகளிலும், சாலையோரங்களிலும் கிடப்பதால் அவற்றின் மூலம் பல சுகாதார கேடுகள் ஏற்படுகிறது. மேலும் அவற்றை பூமிக்கு அடியில் புதைத்தாலும் அவை மக்குவதில்லை. இதன் காரணமாக நிலத்தின் தன்மை கெட்டுவிடுகிறது.

நாப்கின்கள் பயன்படுத்துவோருக்கு அவற்றின் தன்மையானல் கர்ப்ப பை பிரச்சினை உள்பட பல்வேறு தொற்றுகள் ஏற்படுவதாகவும் மருத்துவ நிபுணர்கள் கூறி இருக்கிறார்கள்.

இந்த பிரச்சினைகளில் இருந்து பெண்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதற்காக திருச்சியை சேர்ந்த எஸ். தாமோதரன் தனது குடும்பத்தினரின் உதவியுடன் தரமான துணியால் அடையணை எனப்படும் ஒரு வித சுகாதாரமான நாப்கின்களை தயாரித்து உள்ளார். இந்த நாப்கின்கள் துவைத்து பயன்படுத்தக்கூடியது. மேலும் இது பூமியில் மக்க கூடிய தன்மை வாய்ந்தது என்பதால் மண்ணும் மலட்டு தன்மைக்காக மாறாமல்  பாதுகாக்கப்படுகிறது.

கிராமாலயா என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனரான இந்த தாமோதரன் தான் நாடு முழுவதும் 6 லட்சம் கழிப்பறைகளை கட்டி சுகாதாரத்திற்காக பாடுபட்டதற்காக கடந்த 2022ம் ஆண்டு அப்போது இருந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் திருக்கரங்களால் பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

விருது பெற்றதோடு நின்று விடாமல் பெண்களின் சுகாதார மேலாண்மைக்காக தாமோதரனின் கிராமாலயாய தொண்டு நிறுவனம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மாநாடுகளை நடத்தி வருகிறது. இந்த ஒரு பகுதியாக நமது நாட்டின் தலைநகர் டெல்லியில் மாதவிடாய் சுகாதார மேலாண்மை தொடர்பான நான்காவது உச்சி மாநாட்டினை மத்திய அரசின் நீர்வளத்துறையுடன் இணைந்து நடத்தி முடித்து உள்ளது.

நாடு முழுவதும் இருந்து பெண்களின் சுகாதார பேம்பாடு தொடர்பான பணிகளை செய்து வரும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுகாதார மேம்பாடு தொடர்பான தங்களது கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார்கள். இந்த மாநாட்டில் முன்னாள் மத்திய மந்திரி மீனாட்சி லேகி சாத்வி பகவதி சரஸ்வதி, முன்னாள் இந்திய அழகி சினேகா ஷெரில், ரவி பட்நாகர், மற்றும் கிராமாலயாவை சேர்ந்த நிர்வாகிகள் கீதா, ப்ரீத்தி, இளங்கோவன் ஆகியோரும் சிறப்புரையாற்றி இருக்கிறார்கள்.

மாநாடு நடைபெற்ற இடம் பாரத் மண்டபம் என அழைக்கப்படும் ஜி 20 சர்வதேச மாநாடு நடைபெற்ற இடமாகும். வரலாற்று சிறப்புமிக்க இந்த மண்டபத்தில் வண்ணப்பூக்கள் போல் தெரிந்த இந்த பெண்களை பாரதி இன்று கண்டிருந்தால் ‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என மீண்டும் ஒரு முறை பாடி இருப்பார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top