Close
நவம்பர் 22, 2024 2:05 காலை

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ்நிலையம் திறப்பு எப்போது? அமைச்சர் நேரு அறிவிப்பு

அமைச்சர் நேரு.

திருச்சி மாநகர மற்றும் மாவட்ட மக்களின் கால் நூற்றாண்டு கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் முக ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைந்ததும் திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ்நிலையம் கட்டுமான பணியானது கடந்த 2022ம் ஆண்டு தொடங்கியது. சுமார் 300 கோடியில் கட்ட திட்டமிடப்பட்ட இந்த பணியானது இப்போது ரூ.400 கோடியை தாண்டி செல்கிறது.

ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டுமான பணிகளை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கேஎன்நேரு இன்று பார்வையி்ட்டு ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டுமான பணி மிக தீவிரமாக நடந்து வருகிறது. ஒட்டுமொத்த கட்டுமான பணிகளும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்படடு இருக்கிறது. திருச்சி மாவட்ட ஆட்சியர் இதில் உறுதியாக இருக்கிறார். கட்டுமான பணி முடிவடைந்ததும் முதல்வரிடம் எடுத்துக்கூறி பொங்கல் பண்டிகைக்குள் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தை முதல்வர் அவரது கரங்களால் திறந்து வைக்க நடவடிக்கை எடுப்போம்.

ஒருங்கிணைந்த பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வந்த பின்னாலும் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் மற்றும் மத்திய பஸ் நிலையங்கள் தொடர்ந்து இயங்க தான் செய்யும். தஞ்சாவூர் , புதுக்கோட்டை மற்றும் சென்னை உள்ளிட்ட வெளியூர் பஸ்கள் பஞ்சப்பூரில் இருந்து புறப்படும். கரூர் கோவை மார்க்க பஸ்கள் சத்திரம் பஸ்நிலையம் வழியாக தான் செல்லும்.

அதற்கு தகுந்தாற்போல் பஞ்சப்பூரில் நான்கு வழிச்சாலைகள் அமைக்கவும், பஞ்சப்பூரில் இருந்து ஜீயபுரம் வரை புதிதாக சுற்றுச்சாலை அமைக்கவும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.1600 கோடியில் திட்டப்பணியை  விரைவில் தொடங்க உள்ளது. மேலும் பஞ்சப்பூரில் இருந்து குடமுருட்டி வரை கோரையாற்று கரை வழியாக புதிதாக ரூ.400 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணியும் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top