திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு உணவு வணிகர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உணவு வணிகர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் மற்றும் தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தார்.
இந்த முகாமிற்கு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க மாவட்ட தலைவர் தனகோட்டி ,மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உணவு பாதுகாப்பு அலுவலர் ரவி அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முகாமினை துவக்கி வைத்து பேசுகையில்,
கார்ப்பரேட் நிறுவனங்கள் மஞ்சளில் உள்ள ஆயுளை எடுத்து அதனை ஏற்றுமதி செய்துவிட்டு மீதி இருக்கிற சக்கையில் வேதிப்பொருட்களை சேர்த்து தருகின்றனர் இதனால் உடல்நலம் கெடுகிறது.
காலை உணவு திட்டத்தில் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில்தான் மாதம் தோறும் 13,000 கிலோ மிளகாய் பொடியை மகளிர் குழுக்கள் தயார் செய்து அரைத்து தருகின்றனர். எனவே உணவு நிறுவனங்கள் பொதுமக்களுக்கு நல்ல உணவை அளிக்க மஞ்சள் மிளகாயை கடைகளில் வாங்காமல் அவர்களை அரைத்துக் கொள்ள வேண்டும் . மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பேசினார்.
இம்முகாமில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விமல விநாயகம், விஜயகுமார், தங்கவேல், ஓட்டல்கள் சங்க நகர தலைவர் ரங்கநாதன் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் ஹோட்டல் உரிமையாளர்கள், ஓட்டல் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக தனபாக்கியம் மருத்துவமனை சார்பில் மருத்துவர் வெங்கடேசன் தலைமையில் மருத்துவர்கள் குழு பரிசோதனை செய்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தினர்