Close
நவம்பர் 22, 2024 9:16 மணி

ஆன்லைன் மூலம் அபராதத்தால் லாரி உரிமையாளர்கள் பாதிப்பு : மாநில சம்மேளன தலைவர் தகவல்..!

நாமக்கல்லில் நடைபெற்ற, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயற்குழு கூட்டத்தில், அதன் தலைவர் தன்ராஜ் பேசினார்.

நாமக்கல் :

ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதால் லாரி உரிமையாளர்கள் பாதிப்பு அடைவதாக மாநில சம்மேளன தலைவர் தன்ராஜ் கூறினார்.

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. சம்மேளன தலைவர் தன்ராஜ் கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசினார்.

கூட்ட முடிவில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழகத்தில் லாரிகளுக்கு போலீசார் ஆன்லைன் அபராதம் விதிக்கின்றனர். இதில் பெரும் முறைகேடு நடைபெறுகிறது. என்ன குற்றம் என்று தெரியாமலே அபராதம் செலுத்த வேண்டியுள்ளது. வெளியூரில் உள்ள வண்டிக்கு இங்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

இதன் மூலம் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோரை சந்தித்து மனு அளித்தும் பலனில்லை.

இந்த விசயத்தில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு, லாரிகளுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும்.

லாரிகளுக்கு 3 டி ஸ்டிக்கர் ஒட்டும் நடைமுறையை பல ஆர்டிஓக்கள் பின்பற்றுவதில்லை. புதிய டிரைவிங் லைசென்ஸ் பெறுதல், வானகங்களுக்கான பர்மிட் பெறுதல் மற்றும் புதுப்பித்தல் போன்ற பணிகள் முடிவடைந்து ஆவனங்களை தபாலில் அனுப்புகின்றனர்.

பல டிரைவர்கள் வெளியூர் சென்றுவிடுவதால் அதை டெலிவரி பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் தேவையில்லாத கால தாமதம் மற்றும் சிரமம் ஏற்படுகிறது. தென்மாநிலங்களில் லாரிகளில் சரக்குகள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

பல்வேறு அரசு சோதனைச்சாவடிகளில் மாமூல் வாங்கும் அதிகாரிகளை நேரில் சந்தித்து, மாமூல் வாங்கக் கூடாது என வலியுறுத்த உள்ளோம் என அவர் தெரிவித்தார். திரளான சம்மேளன நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top