திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் போது விதிகளுக்கு முரணாக இயக்கப்படும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என ஆலோசனை கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வருகிற டிசம்பர் 4ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 14ஆம் தேதி பௌர்ணமி விழாவும் நடைபெற உள்ளது.
கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்ட நெரிசலை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வழிகாட்டுதலின்படி திருவண்ணாமலையில் ஆட்டோக்களை முறைப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் சிவகுமார் பேசுகையில்;
கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மோட்டார் வாகன ஆய்வாளர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். அப்போது பொதுமக்களிடம் அடாவடி செய்தாலோ, அதிக கட்டணம் வசூலித்தாலோ ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும்.
ஆட்டோக்கள் பொருத்தவரை அனுமதி சீட்டு, தகுதி சான்று, புகைச்சான்று மற்றும் உரிய சாலை வரி செலுத்தப்பட்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளிடம் மாவட்ட நிர்வாகத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணங்களை மட்டுமே வசூலிக்க வேண்டும். அதிக கட்டணம் வசூலித்தால் மற்றும் அதிக பயணிகளை ஏற்றி கொண்டு சென்றாலும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் .
பக்தர்களிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட ஆட்டோக்கள் மட்டுமே இயக்க வேண்டும். எல்லை மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும் விதிகளுக்கு உட்படாமல் முரணாக இயக்கப்படும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என பேசினார்.
இக்கூட்டத்தில் உதவி காவல் துறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார், போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ரமேஷ், மோட்டார் வாகன முதுநிலை ஆய்வாளர் பெரியசாமி, வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் சேகர், கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், அனைத்து அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம், மற்றும் ஆட்டோ ஓட்டுனர் சங்க நிர்வாகிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.