Close
நவம்பர் 24, 2024 8:51 காலை

ரூ.6 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய குடும்பத்தினருக்கு பொதுமக்கள் பாராட்டு..!

மோகனூர் அருகே ரூ. 6 லட்சம் மதிப்புள்ள நிலத்தை, சிவகாமி மற்றும் தினகரன் ஆகியோர் பொதுமக்களுக்கு தானமாக வழங்கினார்கள்.

நாமக்கல்:

மோகனூர் அருகே மக்கள் பயன்பாட்டுக்காக, ரூ. 6 லட்சம் மதிப்புள்ள தங்களது பூர்வீக நிலத்தை, தானமாக வழங்கிய குடும்பத்தினருக்கு, கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், கே.புதுப்பாளையம் பஞ்சாயத்தில், உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் சின்னம்மாள் தலைமை வகித்தார். கூட்டத்தில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து. கே.புதுப்பாளையம் பஞ்சாயத்தில், சில ஆண்டுகளுக்கு முன், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. அந்த இடம் தனியாருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அதன் உரிமையாளர் பாலகிருஷ்ணன்-சிவகாமி தம்பதியர், கரூர் மாவட்டம், காந்திகிராமத்தில் வசித்து வருகின்றனர்.

அவர்கள், தனது மகன் தினகரன் (32) என்பவருக்கு, அந்த நிலத்தை ஏற்கனவே தான செட்டில்மெண்ட் கொடுத்துள்ளனர். இந்த நிலையில், பஞ்சாயத்து பகுதியில் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி, பொதுமக்கள் நன்மைக்கே கொடுத்துவிடலம் என்று, தினகரன் தனது குடும்பத்தினருடன் ஆலோசனை செய்தார்.

அதையடுத்து, தனக்கு சொந்தமான ரூ. 6 லட்சம் மதிப்பிலான, 400 ச.அடி நிலத்தை, கே.புதுப்பாளையம் பஞ்சாயத்துக்கு தானமாக வழங்க முடிவு செய்தார். இதையொட்டி, கிராம சபை கூட்டத்தில், தினகரன், தனது தாயார் சிவகாமி உள்ளிட்டோர், பஞ்சாயத்து தலைவர் சின்னமாளிடம் நிலத்திற்கான ஆவனத்தை ஒப்படைத்தனர்.

தங்கள் பூர்வீக நிலத்தை ஊர் மக்களின் நலனுக்காக வழங்கிய குடும்பத்தினருக்கு, பஞ்சாயத்து பொதுமக்கள் சார்பில் பாராட்டு தெரிவித்து, மரியாதை செய்யப்பட்டது. தங்கள் நிலத்தை தானமாக வழங்கிய தினகரன் குடும்பத்தினர், அங்கிருந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்புடன், அறுசுவை உணவையும் பரிமாறி மகிழ்ந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top