நாமக்கல் பெண் பூ வியாபாரியிடம் ரூ. 2.50 கோடி தருவதாகக் கூறி ரூ.1 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த, அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நாமக்கல், வண்டிக்காரத்தெருவை சேர்ந்த குமரவேல் மனைவி நந்தினி (42). இவர், நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டில் பூ கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவரிடம் பஸ் டிரைவர்கள் பலரும் பூ வங்கிச் செல்வது வழக்கம்.
நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை மேலகோனார் தெருவை சேர்ந்த பாலமுருகன் (49), என்ற அரசு பஸ் டிரைவரும், நந்தினி கடையில் பூ வாங்கி செல்வதன் மூலம், நன்கு அறிமுகமானார்.
இந்த நிலையில், கடந்த இரண்டு மாதத்திற்கு முன், நந்தினியிடம் சேலத்தை சேர்ந்த பாபுஜி என்பவருக்கு ஆஸ்திரேலியாவில் உலோகம் விற்ற வகையில் ரூ.90 ஆயிரம் கோடி பணம் வந்துள்ளது. அதை கணக்கில் கொண்டுவருவதற்காக டோக்கன் முறையில் ரூ.1 லட்சம் செலுத்தினால், உங்கள் வங்கிக் கணக்கில் ரூ. 2.50 கோடி பணம் பெறலாம் எனக் கூறி, மொத்தம் 4 தவனைகளில் ரூ.1 லட்சம் பணத்தை பெற்றுள்ளார்.
இதேபோல் டிரைவர் பாலமுருகன் பலரிடம் ஆசை வார்த்தை கூறி கோடிக் கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது.
இதனால், அதிர்ச்சி அடைந்த நந்தினி, நாமக்கல் போலீஸ் ஸ்டேசனில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அரசு பஸ் டிரைவர் பாலமுருகனை கைது செய்தனர்.
இந்த நிலையில், இது குறித்து தகவல் கிடைத்ததும், தமிழக அரசு போக்குவரத்து கழக, சேலம் கோட்ட பொதுமேலாளர் கோபாலகிருஷ்ணன், நாமக்கல் அரசு பஸ் டிரைவர் பாலமுருகனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.