Close
நவம்பர் 25, 2024 7:46 மணி

அரசுப்பள்ளி பெயர் பலகையில் ‘அரிசன் காலனி’: அழித்த கல்வி அமைச்சர்

மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் பெயர் பலகையில் எழுதப்பட்டிருந்த அரிசன் காலனி என்ற பெயரை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கருப்பு பெயிண்டால் அழித்தார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரிசன் காலனி தொடக்கப்பள்ளி என்ற பெயரில் செயல்பட்டு வந்தது.

இந்த பெயரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு என மாற்றக்கோரி சென்னையைச் சேர்ந்த வக்கீல் அன்பழகன் என்பவர் தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்திற்கு கடிதம் அனுப்பினார்.

இதையடுத்து அரிசன் காலனி என்ற பெயரை மாற்றி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு என பெயர் மாற்றம் செய்யும்படி ஆணையம் உத்திரவிட்டது.

இதனைத்தொடர்ந்து பள்ளியின் பெயரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு என பெயரை மாற்றி அதற்கான உத்தரவையும் தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது.

இந்நிலையில் மல்லசமுத்திரம் பள்ளிக்கு நேற்று திடீரென வந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பெயர் பலகையில் எழுதப்பட்டிருந்த ‘அரிசன் காலனி’ என்ற பெயரை கருப்பு பெயிண்ட் கொண்டு அவரே அழித்தார்.

தொடர்ந்து பள்ளி பெயர் மாற்றப்பட்டதற்கான அரசு உத்தரவை பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.

மேலும், பெயர் மாற்றுவதற்காக நடவடிக்கை மேற்கொண்ட அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் கணேசன், வக்கீல் அன்பழகன் ஆகியோருக்கு அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதனிடையே பள்ளி பெயர் மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில், கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம் என குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top