திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி செஞ்சி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் வட்டார அளவிலான மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் அரசு நல திட்ட உதவிகள் பெற பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், செய்யாறு சார் ஆட்சியர் பல்லவி வர்மா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்து 174 பயனாளிகளுக்கு அடையாள அட்டை 26 பயனாளிகளுக்கு தேசிய தனித்துவ அடையாள அட்டை 4 நபர்களுக்கு ஆதார் அட்டை 20 பயனாளிகளுக்கு முதல்வர் காப்பீட்டு அட்டை உட்பட பல்வேறு நல திட்டங்களை வழங்கி பேசுகையில்;
மக்களின் மனங்களை அறிந்து அவர்களுக்கு வேண்டிய தேவைகளை உணர்ந்து உதவி செய்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் , தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு இணையதளம் மூலம் பதிவு செய்யும் சிறப்பு முகாம் தற்போது நடைபெற்று வருகிறது.
அரசு எண்ணுகிறதை மாவட்ட நிர்வாகம் குறிப்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிறப்பாக திகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறார். மறைந்த முதல்வர் கருணாநிதி ஆட்சியில் தான் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என்ற தனித்துறையை உருவாக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் எந்த விதத்திலும் பாதிப்படைய கூடாது அவர்களுக்கு அனைத்து அரசு நல திட்டங்களும் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அவர் தொடங்கிய அந்தத் துறையை அவரே வழிநடத்தி பல்வேறு அரசு நல திட்டங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி தான்.
மேலும் எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து அவர்களுக்கு வேண்டிய அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 வட்டாரங்களிலும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்கள் நடத்தி அவர்களுக்கு தேவையான அனைத்தையும் நிறைவேற்றி தருவோம். முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் தேவைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என அமைச்சர் பேசினார்.
முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை கால்கள் அமைக்க அளவிடும் பணியை நேரில் சென்று பார்வையிட்டார் .பின்னர் அங்கு அமைக்கப்பட்டு இருந்த அரங்குகளை பார்வையிட்டு விவரங்களை கேட்டு அறிந்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் மணிகண்டன், சேத்துப்பட்டு பேரூராட்சி மன்ற தலைவர் சுதா முருகன், வர்த்தக அணி தலைவர் திவ்யா செல்வராசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எதிரொலி மணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய்த்துறை கூட்டுறவுத்துறை மகளிர் உரிமைத்துறை பொது சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.