Close
நவம்பர் 27, 2024 7:32 காலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுய தொழில் செய்ய விருப்பமா, தாட்கோ அலுவலகத்தை அணுகலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுயதொழில் செய்ய விரும்பும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் தாட்கோ அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் தாட்கோ மூலம் 2023-2024 ஆம் நிதியாண்டில் முதல்வரின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவுத் திட்டம் மூலம் 81 பேருக்கு ரூ.1 கோடியே 52 லட்சத்து 31 ஆயிரத்து 728 மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல, பிரதான் மந்திரி அன்சுசிட் ஜாட் அபியுதே யோஜனா திட்டம் மூலம் 511 பேருக்கு ரூ.2 கோடியே 80 லட்சம் மதிப்பிலும், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவித் திட்டம் மூலம் 21 குழுக்களைச் சோ்ந்த 252 மகளிா்களுக்கு ரூ.52 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலும், தொழில்முனைவோா் திட்டம் மூலம் 1,352 பேருக்கு ரூ.15 கோடியே 46 லட்சத்து 93 ஆயிரத்து 764 மதிப்பிலும் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், இளைஞா்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம் மூலம் 59 பேருக்கு ரூ.97 லட்சத்து 25 ஆயிரத்து 614 மதிப்பிலும், மகளிா் நிலம் வாங்கும் திட்டம் மூலம் ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 28 மதிப்பிலும், நிலம் மேம்பாட்டு திட்டம் மூலம் 3 பேருக்கு ரூ.3 லட்சத்து 61 ஆயிரத்து 200 மதிப்பிலும் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

2023-2024 ஆம் நிதியாண்டில் மொத்தம் 2,028 பயனாளிகளுக்கு ரூ.21 கோடியே 33 லட்சத்து 72 ஆயிரத்து 334 மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சுயதொழில் செய்ய விரும்பும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் தாட்கோ அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம் என்று  மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன்  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top