Close
நவம்பர் 28, 2024 4:51 மணி

அன்னப்பூரணி அரசு அம்மாவுக்கு 3வது மேரேஜ்..!

அன்னபூரணி -ரோஹித் திருமணம்

செங்கல்பட்டு மாவட்டத்தில்   அன்னபூரணி அரசு அம்மன் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தவர் அன்னபூரணி.  இவர் தன்னை ஆதிபராசக்தி அம்மனின் மறு உருவம் என கூறி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார்.

தனது முதல் கணவரை பிரிந்த நிலையில் இரண்டாவதாக காதல் கணவரான அரசு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அரசு  இறந்ததாக கூறப்படுகிறது. அவர் எவ்வாறு இறந்தார் என தெரியவில்லை.

சிறிது காலத்திற்கு அரசுவின் உருவ சிலையை வடிவமைத்து வழிபட்டு வந்தார். பின்னர் அன்னபூரணி அரசு அம்மன் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்து தன்னை கடவுளின் மறு அவதாரம் எனக்கூறி பக்தர்களுக்கு அருளாசி வழங்க துவங்கினார். Youtube களில் ஆன்மீக சொற்பொழிவை தொடங்கினார்.

தனது மூன்றாவது கணவருடன் அருளாசி வழங்கிய அன்னபூரணி அம்மா

வந்தாரை வாழவைக்கும் திருவண்ணாமலை

வந்தாரை வாழவைக்கும் ஆன்மீக பூமியான திருவண்ணாமலை அருகே கீழ்பெண்ணாத்தூர் பக்கத்தில் ராஜா தோப்பு என்ற பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி அங்கு ஆசிரமம் அமைக்க பூமி பூஜை போட்டார்.  திருவண்ணாமலையில் ஏகப்பட்ட ஆசிரமங்கள் போட்டிக்கு இருப்பதால் திருவண்ணாமலைக்கு வெளியே இவரது ஆசிரமம் அமைப்பதாக அப்போது இவரது சிஷ்யர்கள் தெரிவித்தனர்.

அப்போது அன்னபூரணி அரசு தெரிவிக்கையில் ‘ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்த இடம் தேடி அலைய வேண்டி உள்ளது. அதற்கு என்னிடம் உள்ள பணத்திற்கு இங்கு தான் இடம் வாங்க முடிந்தது.

இங்கு ஒரு ஆசிரமம் அமைத்து ஆன்மீகப் பணியை தொடர உள்ளேன். நான் அருள்வாக்கு சொல்வதில்லை, ஆன்மீகத்தை தான் சொல்லிக் கொடுத்து வருகிறேன். என்னை யாராலும் அழிக்க முடியாது . மக்களுக்கு அருளாசி வழங்குவதை சேவையாகதான் செய்து கொண்டு இருக்கிறேன். இனிமேலும் என்னுடைய உடல் இந்த பூமியில் இருக்கும் வரை சேவையாகதான் செய்வேன். என கூறினார்.

தற்போது அந்த ஆசிரமத்தில் அன்னபூரணி அரசு அம்மா பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார். அங்கு வந்த சில பெண்கள் அவருக்கு கற்பூர தீபம் காண்பிப்பதும் அவரை வழிபடுவதும் என ஈடுபட்டனர்.  மேலும் சில ஆண்கள் பெண்கள் அவரது காலில் விழுந்து வணங்கினர்.

தெய்வீக திருமணம்

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இவர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக திடீரென்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

தன்னிடம் உதவியாளராக இருந்த ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொள்வதாகவும் நவம்பர் 28ஆம் தேதி தெய்வீக திருமணம் நடைபெறும் என தெரிவித்திருந்தார்.

அதன்படி அவரது திருமண நிகழ்ச்சி கீழ்பெண்ணாத்தூர் ராஜா தோப்பில் இன்று காலை நடைபெற்றது. புரோகிதர்கள் யாகம் வளர்த்து மந்திரங்கள் ஓதி திருமண சடங்குகளை நடத்தி வைத்தனர். அன்னபூரணியும் ரோகித்தும் ஒருவருக்கொருவர் மாலையை அணிவித்து கொண்டனர். அதன் பிறகு தாலியை பக்தர்களுக்கு காட்டிய புரோகிதர் அதை ரோகித்திடம் கொடுத்தார். அன்னபூரணி கழுத்தில் ரோகித் அணிவித்தார்.

அதன் பிறகு இருவரும் இணைந்து பக்தர்களுக்கு ஆசிர்வாதம் அளித்தனர். இந்த திருமண நிகழ்ச்சியில் சுற்றுப்புற மக்களும் மாவட்ட பக்தர்களும் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top