Close
டிசம்பர் 5, 2024 2:06 காலை

நாமக்கல்லில் பொதுமக்களின் மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்

திருச்செங்கோட்டில், மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு இணையாக கட்டப்பட்டு வரும் புதிய அரசு ஆஸ்பத்திரி கட்டுமானப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலவலர் ஆசியாமரியம் பார்வையிட்டார். அருகில் கலெக்டர் உமா.

நாமக்கல்:
பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர், அரசு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

நாமக்கல் கலெக்டர் ஆபீசில், மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா முன்னிலை வகித்தார்.

மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநருமான ஆசியா மரியம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:

தமிழகத்தில் அனைத்து திட்டங்களும் விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற நோக்கத்தின் அடிப்படையில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாக்களில் இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை பொதுமக்களிடமிருந்து 1,222 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 602 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 245 மனுக்கள் அரசு பரிசீலினையில் உள்ளது. அதிகாரிகள் பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடியாக பரிசீலனை செய்து, கால தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறப்பு திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்றடைகிறதா என்பது குறித்து, துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். நீண்ட காலமாக தாமதம் ஏற்பட்டால் உடனடியாக கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும். அரசு பள்ளி, கல்லூரி ஹாஸ்டல்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

மேலும், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், அரசுத்துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள், கட்டுமானப்பணிகளின் தற்போதைய நிலை மற்றும் பணி முன்னேற்றம் ஆகியவை குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கண்காணிப்பு அலுவலர் கேட்டறிந்து விரிவாக ஆய்வு செய்தார்.

கூட்டத்தில் டிஆர்ஓ சுமன், டிஆர்டிஏ திட்ட இயக்குநர் வடிவேல், மகளிர் திட்ட இயக்குநர் செல்வராசு, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அருளரசு உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top