Close
டிசம்பர் 5, 2024 2:15 காலை

நாமக்கல் ஈமு நிறுவன உரிமையாளரிடம் பறிமுதல் செய்த வீட்டுமனைகள் டிச. 12ம் தேதி ஏலம் : கலெக்டர்..!

கோப்பு படம்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து நிதியைப் பெற்று மோசடி செய்த நபர்களிடம் இருந்து, பறிமுதல் செய்த 3 வீட்டு மனைகள், வரும் 12ம் தேதி பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல், மோகனூர் ரோட்டில், செல்லம் ஈமு பார்ம்ஸ் மற்றும் வேலவன் கார்டன் சிட்டி டெவலப்மெண்ட்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்ந நிறுவனம், பொதுமக்களிடம் இருந்த லட்சக்கணக்கில் டெபாசிட் பெற்று, நிதி மோசடி செய்ததால், புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நாமக்கல், பொருளாதார குற்றப் பிரிவில் விசாரணை செய்யப்பட்டு, கோவை, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன்கள் பாதுகாப்பு சட்ட சிறப்பு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது.

கோர்ட் உத்தரவுப்படி, நிறுவன உரிமையாளர்கள் சிவக்குமார், கனகம், பழனியம்மாள் ஆகியோரின் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ப.வேலூர் தாலுகா, பிள்ளைகளத்தூர் கிராமத்தில், தலா 2,360 சதுர அடி கொண்ட 2 வீட்டுமனைகள், ராசிபுரம் தாலுகா, காட்டூர், காட்டுக்கொட்டாயில் 3,716 சதுர அடி கொண்ட 1 வீட்டுமனை உள்ளிட்ட, மொத்தம் 3 வீட்டு மனைகள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

வருகிற டிச. 12ம் தேதி மாலை 3 மணிக்கு, நாமக்கல் கலெக்டர் ஆபீசில், டிஆர்ஓ தலைமையில் இந்த ஏலம் நடைபெறும்.

நாமக்கல் கலெக்டர் ஆபீஸ், நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், மோகனூர், கொல்லிமலை, திருச்செங்கோடு, ப.வேலூர் மற்றும் குமாரபாளையம் தாலுகா ஆபீஸ், நாமக்கல், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. ஆபீஸ் அறிவிப்பு பலகைகளில், ஏல நிபந்தனைகள் ஒட்டப்பட்டுள்ளன.

ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு, விருப்பமுள்ள அனைவரும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள், ஏல தேதிக்கு முன்பு, நாமக்கல், பொருளாதார குற்றப் பிரிவு டி.எஸ்.பி., மூலம் ஏல சொத்துக்களை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top