Close
டிசம்பர் 5, 2024 2:07 காலை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

வெள்ளத்தில் மூழ்கிய நெற்பயிர்களை காட்டும் விவசாயிகள்.

தொடர் கனமழை காரணமாக எடையார்பாக்கம்,
ஊத்துக்காடு கிராமங்களில் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் எடையார்பாக்கம்,ஊத்துக்காடு உள்ளிட்ட கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 1000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்திருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

பெஞ்சால் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இதன் காரணமாக பல இடங்களில் சாலைகள்,குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து போக்குவரத்துக்கு இடையூறாகவும் இருந்து வருகிறது.

பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரத்தில் 381 ஏரிகளும்,செங்கல்பட்டில் 528 ஏரிகளும் என மொத்தம் 909 ஏரிகள் உள்ளன. இவற்றில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமன்தண்டலம்,இளநகர்,சித்தேரி உட்பட 10 ஏரிகள் முழுக் கொள்ளவை எட்டியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நந்திவரம்,கூடுவாஞ்சேரி, திம்மாவரம்,ஆத்தூர்,வில்லியம்பாக்கம்,அச்சரப்பாக்கம்,மாத்தூர்,ஒரத்தூர்,கடமலைப்புதூர்,மாம்பட்டு,கயப்பாக்கம் ஆகியன உட்பட மொத்தம் 103 ஏரிகள் உட்பட மொத்தம் இரு மாவட்டங்களையும் சேர்த்து 113 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியிருக்கின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட எடையார்பாக்கம்,ஊத்துக்காடு உட்பட 6 கிராமங்களில் அறுவடைக்கு தயார் நிலையிலிருந்த நெற்பயிர்கள் தொடர்மழையால் சாய்ந்து தண்ணீரில் மூழ்கிக் கிடக்கின்றன.

வங்கிகளில் கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.இது குறித்து விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.நேரு கூறுகையில் , பல கிராமங்கள் தொடர்மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.முக்கியமாக எடையார்பாக்கம்,ஊத்துக்காடு ஆகிய பகுதிகளில் 1000 ஏக்கருக்கும் மேலாக நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது.

10 முதல் 15 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்து விட்டது விவசாயிகளிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அரசு உடனடியாக உரிய அதிகாரிகளை அனுப்பி கள ஆய்வு செய்து ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மழையளவைப் பொறுத்தவரை (மி.மீட்டர் அளவில்) காஞ்சிபுரம் 153.24, உத்தரமேரூர் 205.20,
வாலாஜாபாத் 127,
ஸ்ரீபெரும்புதூர் 130.80,
குன்றத்தூர் 107.20,
செம்பரம்பாக்கம் 142.80 எனவும் மழை பாதிவாகியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top