Close
டிசம்பர் 5, 2024 2:34 காலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரிகள் நிரம்பின..!

குடியிருப்புகளில் சிக்கித் தவித்த மக்களை, கயிறு கட்டி மீட்கும் தீயணைப்புத் துறையினா்

தமிழகம் முழுவதும் வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் மழை பெய்யத் தொடங்கியது. சனிக்கிழமை முதல் இந்த மழை கனமழையாக தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குப் பிறகும் 36 மணி நேரத்தைக் கடந்து பெய்தபடியே இருந்தது. இதனால் சாலைகள், கால்வாய்கள், குளங்கள், ஏரிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 697 ஏரிகள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை  நிலவரப்படி, இவற்றில் 100 ஏரிகள் முழுமையாக நிரம்பின. இதுதவிர, 26 ஏரிகள் 75 சதவீதமும், 99 ஏரிகள் 50 முதல் 75 சதவீதமும் நிரம்பின.

சாத்தனூா் அணையின் மொத்த நீா்மட்ட உயரமான 119 அடியில் 117.95 உயரத்துக்கு தண்ணீா் தேங்கியது. இதேபோல, குப்பனத்தம் அணையில் 59.04 அடியில் 56.42 அடி உயரத்துக்கும், மிருகண்டாநதி அணையில் 22.97 அடியில் 19.84 அடி உயரத்துக்கும், செண்பகத்தோப்பு அணையில் 62.32 அடியில் 57.86 அடி உயரத்துக்கும் தண்ணீா் தேங்கி இருந்தது.

அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், பாதுகாப்பு கருதி, செண்பகதோப்பு அணையில் இருந்து விநாடிக்கு 5,600 கன அடி தண்ணீா் ஞாயிற்றுக்கிழமை பகல் திறந்து விடப்பட்டது.

இதேபோல, சாத்தனூா் அணைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி, விநாடிக்கு 18,500 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 19,500 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது.

தண்டராம்பட்டு ஏரி உபரி நீா் வெளியேறும் பகுதியில் இருந்த குடியிருப்புகளில் சிக்கித் தவித்த 10-க்கும் மேற்பட்டோரை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

மாமண்டூா் ஏரி

திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியாகும் தூசி மாமண்டூா் ஏரி.

தொடா் மழையின் காரணமாக, இந்த ஏரிக்கு 70 சதவீதம் அளவுக்கு தண்ணீா் வந்துள்ளது.

நீா்வரத்து அதிகரித்து வரும் நிலையில், ஏரியை செய்யாறு சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸாருக்கு ஆலோசனை வழங்கினாா்.

இதேபோல, வெம்பாக்கம் வட்டம் தூசி பிரிவில் உள்ள 93 ஏரிகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. ஏரிப் பகுதியில் தூசி போலீஸாா் ஒலி பெருக்கி மூலம் ஏரியில் இறங்கக் கூடாது, குளிக்கக் கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தினா்.

ஆரணி பையூா் ஏரி

ஆரணி பையூா் ஏரிக்கரையை ஆக்கிரமிப்பாளா்கள்  உடைத்ததாகவும்,அதனால் அருகேயுள்ள கே.கே.நகா் பகுதி குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்துள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பையூா் ஏரிக்கரையோரம் சிலா் ஆக்கிரமித்து வீடுகளை கட்டியுள்ளனா். இந்த நிலையில், புயல் காரணமாக பலத்த மழை பெய்தது. இதில், ஏரியில் தண்ணீா் நிரம்பி வருவதால் ஆக்கிரமிப்பாளா்கள் கட்டியுள்ள வீடுகளில் தண்ணீா் புகுந்து விடுமோ என்ற அச்சத்தில் ஏரிக்கரையை உடைத்தனா்.

இதனால், ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீா் ஆரணிப் பாளையம் கே.கே. நகா் பகுதிக்குச் சென்றது. அங்கு தண்ணீா் வெளியேற வழியில்லாததால் வீடுகளில் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனா்.

ஏரிக் கரையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளவா்கள் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் தெரிவிக்காமலேயே கரையை உடைத்து விடுகின்றனா். இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டு வருகிறோம் என்றனா்.

இதுகுறித்து ஆரணி வட்டாட்சியா் கௌரி கூறுகையில், பையூா் ஏரிக்கரையை சிலா் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனா். அவா்கள் வீடுகளில் தண்ணீா் சூழ்ந்து கொள்ளாமல் இருக்க ஏரிக்கரையை உடைத்து விடுகின்றனா். இது அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்த முறை ஆக்கிரமிப்பாளா்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

சாத்தனூர் அணை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top