Close
டிசம்பர் 4, 2024 7:20 மணி

சிவகங்கை மாவட்டத்தில் அமைச்சர் தலைமையில் வளர்ச்சி திட்டங்கள் ஆய்வுக் கூட்டம்..!

வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுடன் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ”உங்கள் தொகுதியில் முதல்வர்” திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் மேற்கொண்டார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

அமைச்சர் கூறும்போது, தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது மட்டுமன்றி, பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டும், அரசின் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தி வருகிறார்கள்.

பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றிடும் வகையில், மக்களுடன் முதல்வர், உங்களைத் தேடி உங்கள் ஊரில், உங்கள் தொகுதியில் முதல்வர் போன்ற பல்வேறு திட்டங்களும் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, தகுதியுடைய மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்தவகையில், சிவகங்கை மாவட்டத்தில் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் பொதுமக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றும் பணி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுதவிர, மாவட்டம் முழுவதும் மக்கள் பிரதிநிதிகள் வாயிலாகவும் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடும் பொருட்டு, சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் திட்டங்கள் வாயிலாகவும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழும் மற்றும் தனிப்பட்ட முறையில் எனது சொந்த நிதியின் கீழும் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதில், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட
அரளிக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளிக்கென முன்னதாக, எனது சார்பில் 02.45 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.

அதனை, தற்போது தரம் உயர்த்துவதற்கான பணிகள் குறித்தும், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குடோன் மற்றும் 200 மெட்ரிக் டன் குளிர்பதன கிடங்கு (பழ வகைகளை பதப்படுத்துதல்) அமைப்பதற்கான பணிகள் தொடர்பாகவும், சிங்கம்புணரி பகுதியில் முன்னதாகவே அரசிற்கு பரிந்துரைக்கப்பட்ட கொப்பரைத் தேங்காய் வணிக வளாகம் அமைப்பதற்கான பணிகள் குறித்தும்,

சிங்கம்புணரி பகுதியில் புதிதாக ஒரு பஸ் டிப்போட் அமைப்பதற்கு போதுமான இடம் தேர்வு செய்வதற்கான பணிகள் குறித்தும், அதேபோன்று, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுற்றுலா தளங்களான பிள்ளையார்பட்டி, திருக்கோஷ்டியூர், பட்டமங்களம், பிரான்மலை, குன்றக்குடி, செட்டிநாடு, வேட்டங்குடிபட்டி பறவைகள் சரணாலயம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் குறித்தும்,

சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 8 புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம், உலகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 5 புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம், திருக்களாபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், 3 புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம், அ.காலப்பூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், 4 புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் ஆகியவைகளை புதிதாக கட்டுவதற்கான பணிகள் குறித்தும் இக்கூட்டத்தில் சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட பணிகள் குறித்து, தங்களது துறை ரீதியாக உரிய திட்ட மதிப்பீடு தயார் செய்து, சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் மாநில அளவிலான குழுவிற்கு அனுப்பி வைத்திடல் வேண்டும். அவை தொடர்பாக, சம்மந்தப்பட்ட துறை ரீதியான அமைச்சர் பெருமக்களிடமும் எடுத்துரைத்து, பணிகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதுபோன்று, மாவட்ட முழுவதும் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு பணிகள் குறித்தும், அரசின் பல்வேறு
துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஆ.இரா.சிவராமன், மாவட்ட வன அலுவலர் பிரபா, இணை இயக்குநர் (வேளாண்மை) சுந்தரமகாலிங்கம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து, துணை இயக்குநர் (வேளாண் வணிகத்துறை தமிழ்செல்வி உட்பட துறை சார்ந்த முதல்நிலை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top