Close
டிசம்பர் 5, 2024 2:13 காலை

கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் ரூ. 38 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு..!

நுகர்வோர் கோர்ட் -கோப்பு படம்

நாமக்கல்:

மாணவரிடம் கட்டணம் பெற்றுக்கொண்டு, பயிற்சி அளிக்காத தனியார் கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம், ரூ. 38,000 இழப்பீடு வழங்க வேண்டும் என, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த புதூர் மலையாம்பட்டியை சேர்ந்தவர் பழனியப்பன், இவரது மகன் தினேஷ் (24). இவர், 2023ம் ஆண்டு ஜூனில், சென்னையில் உள்ள தனியார் பயிற்சி நிறுவனத்தில், ரூ. 26,000 கட்டணம் செலுத்தி, குறுகிய கால கம்ப்யூட்டர் பயிற்சியில் சேர்ந்தார்.

பயிற்சி நிறுவனத்தில் 2 வாரங்கள் மட்டுமே வகுப்புகள் நடந்தது. அதன்பின் வகுப்புகள் நடைபெறவில்லை. இது குறித்து, மாணவர் பயிற்சி நிறுவனத்தில் கேட்டபோது, ஏற்கனவே வேலையில் இருந்த பயிற்சியாளர் வேறு வேலைக்கு சென்று விட்டதால், பயிற்சியை நடத்த இயலவில்லை. வேறு பயிற்சியாளர் நியமிக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்றனர்.

பல வாரங்கள் கடந்தும் பயிற்சி நிறுவனம் மீண்டும் வகுப்புகளை தொடங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர் தினேஷ், வேறொரு நிறுவனத்தில் பணம் செலுத்தி பயிற்சியில் சேர்ந்து உள்ளார். வகுப்புகளை நடத்தாததால், செலுத்திய கட்டணத்தை திரும்பத் தருமாறு மாணவர் கேட்டும், பயிற்சி நிறுவனம் திரும்ப வழங்கவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில், கடந்த, மே மாதம் கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்தின் மீது வழக்கு தாக்கல் செய்தார். விசாரணை முடிவடைந்த நிலையில், நுகர்வோர் கோர்ட் நீதிபதி ராமராஜ், உறுப்பினர்கள் ரமோலா, லட்சுமணன் ஆகியோர் தீர்ப்பளித்தனர்.

அதில், கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் சேவை குறைபாடு புரிந்துள்ளதால், மாணவர் செலுத்திய ரூ. 26,000, அவருக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ. 12,000 சேர்த்து, மொத்தம் ரூ. 38,000 ஒரு மாதத்துக்குள் கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் மாணவருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top