Close
டிசம்பர் 5, 2024 1:43 காலை

மழையால் சேதம் அடைந்த சாலைகள் சீரமைப்பு பணி தீவிரம்..!

சாலைகளை சீரமைக்கும் பணியில் பணியாளர்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த சில தினங்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்ததால் பல லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்கள், துணிகள் சேதமடைந்தன.

திருவண்ணாமலையில் உள்ள மகா தீப மலையில் இருந்து கரைந்து வந்த மண் குழம்புகள் சின்னக்கடை தெரு, மத்தலாங்குளத் தெரு, வேலூா் சாலை, மத்திய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். திருவண்ணாமலை – திண்டிவனம் சாலை, திருவண்ணாமலை -அவலூா்பேட்டை சாலைகளில் தொடா்ந்து வெள்ள நீா் பெருக்கெடுத்து வருவதால் அந்தச் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்திலும் மழை நீா் தேங்கியது.

சீரமைப்புப் பணி தீவிரம்

சேலம் கிருஷ்ணகிரி தர்மபுரி நாமக்கல் எடப்பாடி ஆகிய நெடுஞ்சாலை கோட்டங்களை சேர்ந்த ஆறு உதவி பொறியாளர்கள் மற்றும் 600 சாலை பணியாளர்கள் சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பதினைந்து பொக்லைன் இயந்திரங்கள் 25 லாரிகள் 18 தண்ணீர் இறைக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை – திண்டிவனம் சாலை, திருவண்ணாமலை -அவலூா்பேட்டை சாலை, திருவண்ணாமலை – வேலூா் சாலை என பல்வேறு இடங்களில் சாலைகளில் தேங்கியுள்ள நீரை மோட்டாா்கள் மூலம் வெளியேற்றி வருகின்றனா்.

மேலும் திருப்பூர் ஈரோடு தாராபுரம் கரூர் ஆகிய நெடுஞ்சாலை கோட்டங்களை சேர்ந்த மூன்று உதவி பொறியாளர்கள் மற்றும் 144 சாலை பணியாளர்களைக் கொண்ட சிறப்பு குழு கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை சாலை கிரிவலப் பாதை ஆகிய சாலைகளில் சீரமைப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை தேனி ராமநாதபுரம் சிவகங்கை பழனி ஆகிய நெடுஞ்சாலை கோட்டங்களை சேர்ந்த உதவி பொறியாளர்கள் மற்றும் 147 சாலை பணியாளர்களைக் கொண்ட சிறப்பு குழு திருவண்ணாமலை வஉசி நகர் பகுதியில் சீரமைப்பு பணியின் ஈடுபட்டு வருகின்றனர். தீபத் திருவிழா இன்று தொடங்கியதால் சாலை பணிகள் மிக விறுவிறுப்பாக இரவும் பகலும் நடைபெற்று வருகிறது.

1 Comment

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

1 Comment
scroll to top