திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரது குடும்பங்களுக்கு, தலா ரூ.5 லட்சம் நிவாரணம் பெறுவதற்கான ஆணைகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.
திருவண்ணாமலையில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக வஉசி நகர் 11வது தெருவில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.
பேரிடர் மீட்பு குழுவினர் மூன்று நாட்கள் போராடி 7 பேர் உடலை சடலமாக மீட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத சோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்கும் நடைபெற்றது.
இந்நிலையில் மண் சரிவில் இடிபாடுகளுடன் சிக்கி உயிரிழந்த ஏழு பேரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் வழங்குவதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்ப உறவினர்களிடம் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு 5 லட்சத்திற்கான ஆணை வழங்கி ஆறுதல் கூறினார்.
அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட உறவினர்களிடம் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு தங்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் உடனடியாக மாவட்ட ஆட்சியரையோ அல்லது என்னையோ அணுகி தயங்காமல் கேட்கலாம் என தெரிவித்து உங்களுக்கு உதவி செய்ய நாங்கள் இருக்கிறோம் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாநில தடகள சங்க துணை தலைவர் கம்பன், திருவண்ணாமலை மாநகராட்சி மேயர் நிர்மலா மேல்மாறன், முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன், தாசில்தார் துரைராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.