Close
டிசம்பர் 12, 2024 12:40 மணி

மண் சரிவில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஓபிஎஸ் நிதியுதவி

நிதி உதவியை வழங்கிய ஓ பன்னீர்செல்வம்

திருவண்ணாமலையில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக வ உ சி நகர் 11வது தெருவில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இந்த வீடுகளில் இருந்த கூலித் தொழிலாளி ராஜ்குமாா் , இவரது மனைவி மீனா, தம்பதியின் மகன் கெளதம், மகள் இனியா, இதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ் மகள் மகா, மஞ்சுநாதன் மகள் வினோதினி, சரவணன் மகள் ரம்யா  ஆகியோா் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனா்.

பேரிடர் மீட்பு குழுவினர் மூன்று நாட்கள் போராடி 7 பேர் உடலை சடலமாக மீட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத சோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்கும் நடைபெற்றது.

ஓபிஎஸ் நிதி உதவி

இந்நிலையில் மண் சரிவில் இடிபாடுகளுடன் சிக்கி உயிரிழந்த ஏழு பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியை தமிழக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் நேரில் சென்று ஆறுதல் கூறி வழங்கினாா்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், மண் சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன.

மேலும் பல்லாவரம் மாநகராட்சியில் நடைபெற்ற சம்பவம் மாநகராட்சி எந்த பிரச்சினைகளையும் தீர்க்காமல் மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை காட்டுவதாக உள்ளது.

தமிழக அரசு மத்திய அரசிடம் தற்பொழுது வெள்ள நிவாரண தொகை கேட்டிருக்கிறது. மத்திய அரசும் இழப்பீட்டிற்கு ஏற்றார் போல் போதிய நிவாரணத்தை உறுதியாக வழங்கும் என தெரிவித்தார்.

மேலும் புயல் முன்னெச்சரிக்கையை தமிழ்நாடு அரசு சரியாக கையாளவில்லை.

சாத்தனூா் அணையில் தண்ணீா் திறக்கும்போது படிப் படியாகத்தான் திறந்திருக்க வேண்டும். கடைசி நீா் வழிந்தோடும் வரை பாதுகாப்பான நடவடிக்கைகளை அரசு எடுத்திருக்க வேண்டும். இதை எடுக்கத் தவறியதால்தான் இன்றைக்கு திமுக அரசு மக்களிடம் கெட்ட பெயரை சம்பாதித்துள்ளது என்றாா்.

தொடர்ந்து உயர் நீதிமன்றம் நான்கு வாரத்தில் முடிவு அளிக்க வேண்டும் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு துக்க வீட்டிற்கு வந்து அரசியல் வேண்டாம் என பதில் கூறினார்.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன், தெற்கு மாவட்ட செயலாளர் பீரங்கி வெங்கடேசன், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ரஞ்சித் குமார், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top