சிவகங்கை :
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விநியோகம் மற்றும் பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள், சிற்றுண்டி கடைகள் ஆகியவைகள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்-பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு, மாவட்ட அளவிலான பணிக்குழு கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில், பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு, மாவட்ட அளவிலான பணிக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்,மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடையை செயல்படுத்தும் மாவட்ட அளவிலான பணிக்குழு அமைக்கப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடை குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் மற்றும் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இக்கூட்டத்தின் வாயிலாக கலந்தாலோசிக்கப்பட்டு
வருகிறது.
வருங்கால சந்ததியினர்களின் நலனுக்காகவும், பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பினைத் தடுக்கப்பதற்கும், பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் பல்வேறு பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்தும் பழக்கத்தை மீண்டும் கொண்டு வரவும், தமிழக அரசால் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கைப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள், உணவுப் பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பைகள் / பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சி குழல்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்றவை தயாரிக்கப்படுவதும், சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், போக்குவரத்து செய்வதும், விற்பதும், உபயோகிப்பதும் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் அறிந்தவையாகும்.
ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விற்பனை, விநியோகம் மற்றும் பயன்பாடு ஆகியவற்றை வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், சிற்றுண்டிச் சாலைகள், திருமண மண்டபங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தவிர்ப்பதற்கும்,
அதற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பனை ஓலைகiளால் செய்யப்பட்ட பொருட்கள், பாக்குமட்டை தட்டுகள், வாழை இலைகள், தாமரை இலைகள், உலோக தட்டுகள், பீங்கான் தட்டுகள், பீங்கான் குவளைகள், உலோக குவளைகள், உலோக கொள்கலன், கண்ணாடி குவளைகள், கண்ணாடி பாட்டில்கள், காகித சுருள், துணி பைகள், அலுமினிய தாள், மண் குவளைகள், மண்பாண்டங்கள், காகித, மர உறிஞ்சு குழாய்கள்,காகிதம் / சணல் பைகள், காகித /துணி கொடிகள் ஆகியவைகளை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.
மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விநியோகம் மற்றும் பயன்படுத்தும் வணிக நீறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள், சிற்றுண்டி கடைகள் ஆகியவைகளில், உள்ளாட்சி அமைப்புக்கள் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு,
தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தல் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்நிறுவனங்கள் ஆகியவைகளின் மீது, துறை ரீதியான கள ஆய்வுகள் மேற்கொண்டு, விதிமுறைகளின்படி உரிய நடவடிக்கைகளும், அபராதமும் விதித்தல் வேண்டும்.
மேலும், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள், சிற்றுண்டிகள் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்ட்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து, அரசால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்குவதற்கான நடவடிக்கைகளை துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என, மாவட்ட ஆட்சித்
தலைவர் ஆஷா அஜித், தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் எஸ்.பாண்டியராஜன், மாவட்ட அளவிலான பணிக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி, நகராட்சிகளின் ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.