Close
டிசம்பர் 12, 2024 12:49 மணி

2000 பேரை அனுமதிப்பது சாத்தியமா? தீப மலையில் வல்லுநா் குழு இன்று ஆய்வு

ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில், தீபமலையில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து வல்லுநா் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா்கள் எ.வ.வேலு, பி.கே.சேகா்பாபு ஆகியோா் தெரிவித்தனா்.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வ மான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 1ஆம் தேதி துவங்கியது.

தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீபத்திருவிழா வருகின்ற 13ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .

இந்நிலையில் கடந்த டிசம்பர் 1,2 தேதிகளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த புயல் மழையால் தீப மலையில் பாறைகள் விழுந்து மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.

தீப மலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மலைப்பகுதிக்கு யாரும் வரவேண்டாம் என்றும் மலைப்பகுதியில் ஆய்வு செய்து வரும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆய்வுக் கூட்டம்

இந்நிலையில் தீப மலைக்கு பக்தர்களை அனுமதிப்பது குறித்து அமைச்சர்கள் தலைமையில் ஆய்வுக்கு கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தலைமை வகித்தாா். சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா், ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், தீபத் திருவிழாவுக்கு மாவட்ட நிா்வாகம், காவல்துறை, அறநிலையத்துறை மற்றும் பல்வேறு துறைகள் சாா்பில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கேட்டறிந்தாா்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் வேலு, சேகர்பாபு ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தீபத் திருவிழாவுக்கு 25 தற்காலிகப் பேருந்து நிலையங்கள், 21 ஆயிரம் காா்களை நிறுத்தும் வகையில் 120 காா் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்படுகின்றன. 3,408 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தீபத் திருவிழா நாளில் கோயிலுக்குள் 11,500 பக்தா்களை அனுமதிக்கலாம் என்று பொதுப் பணித் துறை தெரிவித்துள்ளது.

வல்லுநா் குழு இன்று ஆய்வு

தற்போதுள்ள சூழ்நிலையில் மலை மீது 2000 பேரை அனுமதிப்பது சாத்தியமா? என்பதை ஆராய முதலமைச்சரின் உத்தரவின்படி 8 பேர் கொண்ட புவியியல் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் இன்று ஆய்வு செய்து அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்.

தொடர்ந்து அமைச்சர் வேலு தெரிவிக்கையில், பொதுவாக பத்திரிகை நண்பர்கள் தொடர்பான பாஸ் சம்மந்தமாக சில சிக்கல்கள் உள்ளன. முன்கூட்டியே பல விஷயங்களை ஆய்வு செய்தே பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே திடீரென முதல் நாள் வந்து எங்களுக்கு தீபம் பாஸ் வேண்டுமென கோரிக்கை வைத்தால் அது ஏற்கப்படாது. இதனை பத்திரிகை நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் ஆன்லைன் டிக்கெட்டுகள் 500 என்ற எண்ணிக்கையில் பரணி தீபத்தன்று வழங்கப்படுகின்றது . மகா தீபத்தன்று 1500 டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. மேலும் உபயதாரர்கள் பாஸ் என ஒட்டுமொத்தமாக 11,500 பேர் அனுமதிக்கப்படுவர்.சென்ற ஆண்டு சில குறைகள் இருந்தாலும் அது இப்போது நிகழாது.

பக்தர்களும் நேர வரைமுறைகளை பின்பற்ற வேண்டியது மிக முக்கியம் அதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என அமைச்சர் வேலு பேசினார்.

பக்தர்களின் நலனுக்காக அமைச்சர் மற்றும் துணை சபாநாயகர் இருவரும் களத்தில் நிற்கின்றனர்.

தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், பாஸ் என்பது 9ம் நாள் திருவிழாவின்போது தான் வழங்கப்படும். இந்த முறை பாதுகாப்பு இடர்பாடுகள் நிறைய உள்ளன. கடந்த காலங்களை போல் செயல்பட முடியாது. சின்ன தவறுகளுக்கு கூட வாய்ப்பு தர மாட்டோம்.

போலி பாஸ் உருவாக்குவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முறை அனைத்து பாஸ்களிலும் கியூ ஆர் கோடு இடம்பெறும்.

இம்முறை நம் மாவட்ட அமைச்சர் வேலு மொத்தம் 7 இடங்களில் உள் அனுமதிக்கு உண்டான வரிசைகளை ஏற்படுத்தி உள்ளார் . மேலும் தேவையான ஆலோசனைகளும் அவர் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களின் நலனுக்காக அமைச்சர் மற்றும் துணை சபாநாயகர் இருவரும் களத்தில் நிற்கின்றனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா், மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் கம்பன் ,கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழுவினர், துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top