Close
டிசம்பர் 12, 2024 5:49 காலை

தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு டிச.13 (வெள்ளிக்கிழமை) 4,089 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து கிரிவலப்பாதையை இணைக்கும் வகையில் 40 சிற்றுந்துகள் கட்டணமில்லாமல் இயக்கப்படுகிறது.

நினைத்தாலே முக்தி தரும் தளமான திருவண்ணாமலை வருகின்ற 13 ஆம் தேதி கார்த்திகை தீப விழா கொண்டாடப்படுகிறது இந் திருவிழாவிற்கு வெளிமாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் சுமார் 40 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்களின் வசதிக்காக விழுப்புரம் கோட்டம் மதுரை கோட்டத்தில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தீபத் திருவிழாவிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மதுரை கோட்டம்

அதன்படி மதுரை திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மண்டலங்களில் வழக்கமான பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 300 சிறப்பு பஸ்கள் இயக்க தேவையான நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. திருவண்ணாமலைக்கு பக்தர்கள் சென்றுவர வசதியாக சிறப்பு பஸ்களுடன், கடைசி நேர கூட்ட நெரிசலை சமாளிக்க  https:// www.tnstc.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யவும், அரசு போக்குவரத்து கழக செல்போன் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் டீலக்ஸ் வகை பஸ்களுக்கான முன்பதிவும் செய்து கொள்ளலாம். பயணிகளின் பாதுகாப்பான பயணம், பயணிகளுக்கான வழிகாட்டுதல் மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்க வசதிக்காக முக்கிய பஸ் நிலையங்களில் போக்குவரத்துக் கழக அலுவலர்கள், டிக்கெட் பரிசோதர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை

12.12.2024 வியாழக்கிழமை முதல் 15.12.2024 ஞாயிற்றுக்கிழமை வரை பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக சென்னையிலிருந்தும், தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் மேற்கண்ட நாட்களில் 4089 சிறப்பு பேருந்துகள் மூலம் 10110 நடைகள் இயக்கப்பட உள்ளது.

சிற்றுந்துகள்

மேலும், திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து கிரிவலப்பாதையை இணைக்கும் வகையில் 40 சிற்றுந்துகள் கட்டணமில்லாமல் இயக்குவதற்கும், அரசின் வழிகாட்டுதலின்படி கடந்த தீபாவளி பண்டிகையின் போது பயணிகளின் வசதிக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கியது போல், தீபம் சிறப்பு பேருந்து இயக்கத்தின் போதும் 150 தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top