Close
டிசம்பர் 12, 2024 3:40 மணி

மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு முகாமினை பார்வையிட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாநகராட்சி சார்பாக நடைபெறும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இம்முகாமினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்,

திருவண்ணாமலை மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு நகரம் தூய்மையாக இருப்பதற்கு தூய்மை பணியாளர்கள் மிக முக்கிய காரணம்.

தூய்மை பணியாளர்கள் ஆகிய உங்களுடைய உடல் ஆரோக்கியம் மிக முக்கியம், ஆகவே கையுறையில்லாமல் எந்த தூய்மை பணியும் மேற்கொள்ளக் கூடாது. உங்களின் ஆரோக்கியம் உங்கள் குடும்பத்திற்கு மிக முக்கியம் எனவே பாதுகாப்பாக பணி புரிய வேண்டும். இந்த முகாமினை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும்.

இந்த முகாமினை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிளாஸ்டிக் பொருட்களைத் தவிருங்கள்

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படுகின்ற நெகிழிப் பொருட்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்.

நெகிழிப் பொருட்களுடன் மக்கும் பொருட்களையும் சேர்த்து போடுவதால் மக்கும் பொருட்களும் மக்காத நிலை ஏற்படுகிறது. நெகிழி ஆனது மண்ணில் சேர்வதால் நிலத்தடி நீர்மட்டம் உயராத நிலை ஏற்படுகிறது. மேலும் நெகிழியானது எரிக்கப்படுகின்ற பொழுது கார்பன் டையாக்சைடு என்ற வேதிப்பொருள் வெளியாகின்றது. எனவே பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். சூடான தேநீர் உள்ளிட்டவற்றை பிளாஸ்டிக் பையில் வாங்கி குடிப்பதன் மூலம் பிளாஸ்டிக் ஆனது உறுதி தேநீரில் கலந்து உடலுக்குள் செல்கிறது.

பிளாஸ்டிக் பொருட்களை தேவையில்லாத இடங்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கேரி பேக் வாயிலாக அதிகமான குப்பைகள் சேருவதற்கு வழியாக அமைகிறது. அடுத்த தலைமுறை நன்றாக இருப்பதற்கு கட்டாயமாக நாம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்பாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என அறிவுறுத்தி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், மாவட்ட மாநகராட்சி மேயர் நிர்மலாவேல்மாறன், துணை மேயர் ராஜாங்கம், மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், வட்டாட்சியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top