திருச்சியில் இன்று 07.12.2024 சனிக்கிழமை சுற்றுச்சாலைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட10 ஏரிகளை மீட்பது தொடர்பான கூட்டுக் குழு
ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருச்சி மாநகரை சுற்றி -தஞ்சாவூர்- புதுக்கோட்டை – மதுரை – திண்டுக்கல் -தோகமலை -கரூர் நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் சுற்றுச்சாலைக்காக (ரிங்ரோடு) 13 ஏரிகள் நடுவில் சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டது. முன்னதாக திண்டுக்கல் கரூர் நெடுஞ்சாலைகளை இணைக்கும் சுற்றுச்சாலைக்காக புங்கனூர் கள்ளிக்குடி உள்ளிட்ட மூன்று ஏரிகள் வழியே சாலை போட ஆரம்பித்தபோது உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்த ஏரியில் கொட்டப்பட்ட மண் அகற்றப்பட்டது. அதன் பேரில் தமிழக அரசு மற்ற 10 ஏரிகளுக்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டது.
தமிழக அரசு அனுமதி ரத்து செய்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சுமார் பத்து ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் தமிழக அரசு அனுமதியை ரத்து செய்தது தவறானது என்று கூறி உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 10 ஏரிகளில் சுற்றுச்சாலையானது, கொரோனா பொது முடக்க காலத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது அவசர அவசரமாக நயவஞ்சகமாக சாலை ஏரிகளின் நடுவே போடப்பட்டு, அதனைக் கொண்டு இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தை தவறாக திசை திருப்பி உத்தரவை பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த புதிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாத நிலையில் இந்த சுற்றுச்சாலையின் வழியே போக்குவரத்து தொடங்கி சுங்கச்சாவடி வசூல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றுச்சாலை தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் தற்போதும் தமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட தலைவர் ம.ப.சின்னதுரை அ தாக்கல் செய்த வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ள நிலையில் இது பற்றி பல்வேறு இயக்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஏரிகள் மீட்பு கூட்டுக்குழு ஆலோசனை கூட்டம் திருச்சியில் தலைமை தபால் நிலையம் எதிரில் உள்ள ராணா அரங்கில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட தலைவர் ம.ப.சின்னதுரை தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் முகிலன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 60 இயக்கங்களின் பிரதிநிதிகள் கொண்ட ஓர் ஒருங்கிணைப்பு குழு ம.ப.சின்னதுரை தலைமையில் அமைக்கப்பட்டது. மேலும் பதினைந்து நபர்கள் கொண்ட ஓர் நிர்வாக குழு அமைக்கப்பட்டது.
இந்த சுற்றுச்சாலையில் ஏரிகள் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்குகள் அதன் ஆவணங்கள் சேகரிக்க, வழக்கு தொடர்பான விபரங்களை குழுவுக்கு அளிக்க வழக்கறிஞர்கள் குழு அமைக்கப்பட்டது.
கூட்டுக் குழு சார்பாக விரைவில் மாவட்ட ஆட்சியர், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், பொதுப்பணித்துறை உள்ளிட்ட சுற்றுச்சாலை தொடர்பான அரசு அதிகாரிகளை சந்தித்து சாலையில் கொட்டப்பட்டுள்ள மண்ணை அப்புறப்படுத்துவது தொடர்பாகவும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பாகவும் மதுரை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை சரியான வகையில் கையாள்வது தொடர்பாகவும் வலியுறுத்தி கோரிக்கை மனு அளிப்பது.
இந்தச் சுற்றுச்சாலையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஏரிகளை மீட்க பிரச்சார இயக்கமாக ஒரு கையெழுத்து இயக்கத்தை விரைவில் முக்கிய மக்கள் தலைவர்களைக் கொண்டு விரைவில் ஆரம்பிப்பது.
மேற்கண்ட தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
சமூக நல இயக்கங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்கள், விவசாய இயக்கங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், சமூக ஆர்வலர்கள், நுகர்வோர் இயக்கங்கள், மனித உரிமை இயக்கங்கள் வழக்கறிஞர்கள் சங்கங்கள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட இயக்கங்களின் நிர்வாகிகள் இயக்கங்களின் நிர்வாகிகள் கென்னடி, கமருதீன், கரூர் சண்முகராஜ், வின்சென்ட், கே.சி.நீலமேகம், பேராசிரியர் கி.சதீஸ்குமார், ஜெயக்குமார், முகமது இக்பால், இராமகிருஷ்ணன், புங்கனூர் சிதம்பரம், செந்தில்குமார், கவித்துவன், ஜீவா, முகமது காசிம், ஆனந்த், தாயனூர் சேகர்,சம்சுதீன், பஷீர், விவேகானந்தன், சத்தியமூர்த்தி, சிவராசன், திவாகர் உள்பட பலர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.